2½ வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்ற சித்திக்கு ஆயுள் தண்டனை
2½ வயது பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக்கொன்ற சித்திக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது
விழுப்புரம்
2-வது திருமணம்
விழுப்புரம் சித்தேரிக்கரை செல்வா நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷமிலுதீன் (வயது 30). இவருடைய மகள் நஸிபா(2½). இவளது தாய் பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அதன்பிறகு குழந்தை நஸிபாவை ஷமிலுதீன், தனது தாய் ஷகிலாவின் பொறுப்பில் வளர்க்க விட்டு கடந்த 2019-ம் ஆண்டு 2-வதாக அப்சானா (22) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த சூழலில் ஷமிலுதீன் தனது பெற்றோரிடம் தகராறு செய்துவிட்டு குழந்தை நஸிபாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துவந்து அப்சானாவுடன் சேர்ந்து வளர்த்து வந்துள்ளார். நஸிபா, வீட்டிற்கு வந்ததில் இருந்தே அவளை அப்சானா கடுமையாக திட்டி கொடுமை செய்து வந்துள்ளார். மேலும் நஸிபாவுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனநிலையில் அவளுக்கு தினமும் இன்சுலின் ஊசி போடுமாறு டாக்டர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால் நஸிபாவுக்கு இன்சுலின் ஊசி போடாமலும் உரிய மருந்து, மாத்திரைகள் கொடுக்காமலும் அவளை அப்சானா அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி நஸிபா, இரவில் தண்ணீர் அதிகமாக குடித்து அடிக்கடி சிறுநீர் கழித்து தனக்கு தொல்லை கொடுத்து வந்ததால் நஸிபா மீது அப்சானா கடும் ஆத்திரத்தில் இருந்து வந்தார்.
பெண் குழந்தை கொலை
இந்நிலையில் ஷமிலுதீன், கடந்த 14.7.2021 அன்று காய்கறி லோடு ஏற்ற வெளியூர் சென்றிருந்த நிலையில் 16.7.2021 அன்று அதிகாலை 3.50 மணியளவில் தூங்கிக்கொண்டிருந்த நஸிபாவை அப்சானா, சமையலறைக்கு தூக்கிச்சென்று குழந்தையின் தலையை சுவரில் முட்டியதோடு, குழந்தையின் நெஞ்சை கையால் அழுத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்தார். இந்த கொலையை மறைப்பதற்காக குழந்தை நஸிபா, சமையலறை சிலாப்பில் இருந்து கீழே விழுந்து இறந்துவிட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார். இதுகுறித்து குழந்தையின் உறவினர் முகமது சாகீர் விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அப்சானா மீது போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
சித்திக்கு ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹெர்மேஸ், குற்றம் சாட்டப்பட்ட அப்சானாவிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அப்சானா, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சங்கீதா ஆஜரானார்.