பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
மாரியம்மன் கோவிலில் அனுமதியின்றி நுழைந்ததாக 9 பேரை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேந்தமங்கலம்
மாரியம்மன் கோவில்
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பேளுக்குறிச்சி ஊராட்சியில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் வழிபாடு செய்வது தொடர்பாக இருதரப்பினர் இடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் ஒரு தரப்பினர் அந்த கோவிலில் நுழையும் போராட்டம் அறிவித்திருந்தனர். இதையறிந்த கோவில் நிர்வாகிகள் கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டி பேளுக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில், போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கடந்த மாதம் இருதரப்பினரை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அதையடுத்து நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் பாதுகாப்பு கருதி பேளுக் குறிச்சி மாரியம்மன் மற்றும் விநாயகர் கோவிலுக்குள் கடந்த மாதம் 17-ந் தேதி வரை பொதுமக்கள் உள்பட யாரும் நுழையக்கூடாது என்றும், கோவிலில் பூஜைகள் செய்ய பூசாரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இந்தநிலையில் நேற்று காலை ஒரு தரப்பை சேர்ந்த 9 பேர் திடீரென்று கோவிலுக்குள் நுழைந்தனர். இதையறிந்த மற்றொரு தரப்பினர் இது குறித்து பேளுக்குறிச்சி போலீசாருக்கு புகார் அளித்தனர். மேலும் 9 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் முற்றுகையில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் நேற்று அங்கு பரபரப்பு ஏற்பட்டது.