குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம்


குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம்
x

திருவண்ணாமலை குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலைதிருவண்ணாமலை

திருவண்ணாமலை குயவர் மடத்தில் 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாததால் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

குயவர் மடம்

திருவண்ணாமலை கொசமட தெருவில் குயவர் மடம் செயல்பட்டு வருகின்றது. இந்த மடத்தில் கடந்த 1994-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளதாகவும், 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக தற்போதைய நிர்வாகிகள் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து குலாலர் சமுதாய மக்கள் நேற்று குயவர் மடத்தின் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளி குலாலர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மடத்தின் அருகில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து வந்து குயவர் மடத்தினை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், தற்போது உள்ள தலைமை 28 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல் தன்னிச்சையாக செயல்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமுதாய மக்களுக்கு மடத்தில் முன்னுரிமை மற்றும் தங்குவதற்கு அனுமதி மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

பூட்டு போட்டு போராட்டம்

போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மடத்தின் முன்பக்க இரும்பு கேட் பூட்டு போட்டு பூட்டப்பட்டு இருந்தது. மேலும் திருவண்ணாமலை டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் பூட்டு மற்றும் சங்கிலி வாங்கி வந்து பூட்டு போட்டு பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் திருவண்ணாமலை டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story