தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம்


தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டம்
x

சுங்க கட்டண உயர்வை கண்டித்து நாமக்கல்லில் தே.மு.தி.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

ஆண்டுதோறும் 2 கட்டங்களாக சுங்க கட்டணத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கிறது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் 10 சதவீதம் வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வந்து உள்ளது. இது பல்வேறு தரப்பினரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தே.மு.தி.க., நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி, சுங்கவரி கட்டணத்தை உயர்த்திய மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து சுங்க சாவடிகளிலும் நேற்று தே.மு.தி.க. சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி நாமக்கல் வடக்கு, தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க., சார்பில் நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் சுங்க சாவடியில் முற்றுகை போராட்டம் நடந்தது.

நாமக்கல் மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம், விஜய் சரவணன் ஆகியோர் தலைமை தாங்கினர். வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சவுந்திரராஜன், பொருளாளர் மகாலிங்கம், துணை செயலாளர்கள் சக்திவேல், பாலச்சந்திரன், தனலட்சுமி, சுந்தர ஆனந்தர், செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தின் போது சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட நிர்வாகிகள் விஜயன், ரமேஷ், சதாசிவம் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story