போதை பழக்கத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம்
போதை பழக்கத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடந்தது.
போதை பழக்கத்துக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை தொடங்கினர். அவர்கள் வருகிற 21-ந் தேதிக்குள் போதைக்கு எதிராக 1 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கி, அதனை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கு எதிராக 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் தொடங்கினர். இதற்கு அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மக்களுக்கான மருத்துவ கழகத்தின் மாநில செயலாளர் டாக்டர் கருணாகரன் கலந்து கொண்டு போதைக்கு எதிராக முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து அந்த அமைப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கையெழுத்திட்டனர். அப்போது அவர்கள் போதையில்லா தமிழகத்தை உருவாக்கிடவும், அதில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை காத்திடவும், பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்திட போலீசார் முழுவீச்சில் செயல்பட வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.