மார்கழி மாத பிறப்பையொட்டி பஜனை பாடல்களை பாடி பக்தர்கள் வீதிஉலா கோவில்களில் விளக்கேற்றி பெண்கள் வழிபாடு
மார்கழி மாதம் பிறந்ததையொட்டி பக்தர்கள் வீதிகளில் வலம் வந்து பஜனை பாடல்களை பாடி சென்றனர். கோவில்களில் விளக்கேற்றி பெண்கள் வழிபட்டனர்.
சேலம்,
பஜனை பாடல் பாடி வீதி உலா
மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும் நித்யவிரத நாளாக கடைபிடிக்கப்படுகிறது. நேற்று மார்கழி மாதம் பிறந்ததையொட்டி சேலம் மாநகரில் பலர் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பே எழுந்து நீராடி விட்டு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் அதிகாலையில் எழுந்து வீடுகள் முன்பு கோலமிட்டனர்.
சேலம் டவுன், பட்டைகோவில் பகுதி, அம்மாபேட்டை, கருங்கல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் மார்கழி பஜனை குழுவினர் அதிகாலை வேளையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி சென்றதை காணமுடிந்தது.
தங்கக்கவசத்தில் ராஜகணபதி
மார்கழி பிறப்பையொட்டி சேலத்தில் பிரசித்திபெற்ற ராஜகணபதி கோவிலில் மூலவருக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் உற்சவர் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் சேலம் சுகவனேசுவரர் கோவில், செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், சின்னத்திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் பலர் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில்களில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
ஆன்மிக சொற்பொழிவு
மார்கழி மாதம் ஆன்மிக சொற்பொழிவும் தொடங்கப்பட்டது. சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் திருமண மண்டபத்தில் மார்கழி பெருவிழா சார்பில் ஆன்மிக சொற்பொழிவு தொடங்கியது. முதல் நாளான நேற்று ''இறைவன் உறையும் இடம்'' என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.