சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழா கொடியேற்றம் நாளை நடக்கிறது


சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழா கொடியேற்றம்  நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 4:25 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

சிவகங்கை

சிங்கம்புணரி

சிங்கம்புணரி சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 3-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

அய்யனார் கோவில்

சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்பட்ட பிரசித்தி பெற்ற சேவகப்பெருமாள் அய்யனார் பூரண புஷ்கல தேவியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் விசாக திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

திருவிழாவில் 9-ம் நாளன்று நடைபெறும் தேரோட்ட விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள். இந்த கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. இதனால் இந்த ஆண்டு கோவில் திருவிழா ஆனி மாதம் நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 15-ந் தேதி இரவு சுவாமி சந்திவீரன் கூடத்திற்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தேரோட்டம்

நாளை காலை முதல் நிகழ்வாக சந்திவீரன் கூடத்திற்கு வைகாசி திருவிழா காணிக்கை வாங்க சென்றதாக கூறப்படும் வெண்கல விநாயகர் வெள்ளி சப்பரத்தில் திருவிழாவிற்கான வசூல் முடிவுற்று கோவிலுக்கு திரும்பும் நிகழ்வு நடைபெற்றது. வெண்கல விநாயகர் சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் எழுந்தருளல் நிகழ்ச்சியை தொடர்ந்து மதியம் 1 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் காப்புக்கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 5-ம் நாள் திருவிழாவான வரும் 29-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி, 30-ந் தேதி கழுவன் திருவிழா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வரும் ஜூலை மாதம் 3-ந் தேதி மாலை தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவுக்கிணங்க தேவஸ்தான அதிகாரி தன்னாயிரம், சிங்கம்புணரி கிராமத்தார்கள், அடைக்கலம் காத்த நாட்டார்கள், கோவில் பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள், பூஜகர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story