ஆகாய தாமரை பிடியில் சிங்காநல்லூர் குளம்
சிங்காநல்லூர் குளத்தை ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற வாங்கிய நவீன எந்திரம் எங்கே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிங்காநல்லூர் குளத்தை ஆகாய தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற வாங்கிய நவீன எந்திரம் எங்கே என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிங்காநல்லூர் குளம்
கோவை-திருச்சி ரோட்டில் சிங்காநல்லூர் குளம் உள்ளது. 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்துக்கு தனிப்பெருமை உண்டு. இந்த குளத்திலும், குளக்கரையிலும் 1000-க்கும் மேற்பட்ட பல்லுயிர்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த குளக்கரையில் 453 வகையான தாவரங்கள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.
அதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவை மூலிகை தாவரங்கள் ஆகும். எனவே இந்த குளத்தை நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து, இங்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை அழைத்துச்சென்று தாவரங்கள், பல்லுயிரிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு
இது ஒருபுறம் இருக்க இந்த குளத்தில் ஆகாயத்தாமரையின் ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது. ஆனால் இதை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த குளம் இருக்கும் இடமே அடையாளம் தெரியாமல் போய்விட்டது. எனவே இந்த குளத்தில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரையை அகற்றி இதுபோன்று ஆக்கிரமிப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சிங்காநல்லூர் குளம் பல மாதங்களாக ஆகாய தாமரை ஆக்கிரமிப்பால் சிக்கி உள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இந்த குளத்தை, ஏன் அதிகாரிகள் பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான் தெரியவில்லை. குளத்தில் ஏராளமான பல்லுயிர்கள் இருப்பதால், அதன் மீது ஆகாயத்தாமரை ஆக்கிரமிக்கும்போது பல்லுயிர்கள் உயிரிழந்துபோகவும் வாய்ப்பு இருக்கிறது.
பாதுகாக்க வேண்டும்
மேலும் இந்த குளத்தில் அதிகளவில் கழிவுநீர் கலக்கிறது. அதைத்தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்ற ஆக்கிரமிப்பை தடுக்க மாநகராட்சி சார்பில் நவீன எந்திரம் வாங்கப்பட்டது.
அது எங்கே போனது என்று தெரியவில்லை. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த குளத்தில் உள்ள ஆகாயதாமரை ஆக்கிரமிப்பை அகற்றி குளத்தை பாதுகாக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.