வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கவால் குரங்கு குட்டி ஈன்றது - சாம்பார் மான், காட்டுமாடு உயிரிழந்தன


வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கவால் குரங்கு குட்டி ஈன்றது - சாம்பார் மான், காட்டுமாடு உயிரிழந்தன
x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கவால் குரங்கு குட்டி ஈன்றது. சாம்பார் மான், காட்டுமாடு, காட்டுப்பன்றி உயிரிழந்தன.

சென்னை

சென்னையை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது. அழிந்துவரும் இனங்களில் ஒன்றான சிங்கவால் குரங்குகள் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு பெண் சிங்கவால் குரங்கு சில நாட்களுக்கு முன்பு அழகான ஒரு குட்டியை ஈன்றுள்ளது. இதையடுத்து தாய் சிங்கவால் குரங்கு மற்றும் குட்டியை பூங்கா டாக்டர்கள் தனியாக ஒரு கூண்டில் அடைத்து வைத்து 24 மணி நேரமும் தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். தாய் மற்றும் குட்டிக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகளையும் வழங்கி வருகின்றனர். புதிதாக பிறந்துள்ள சிங்கவால் குட்டியின் பாலினம் வளர்ந்த பிறகே தெரியவரும்.

முதன் முதலாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வால்பாறை சோலைக்காடுகளில் இருந்து 1990-ம் ஆண்டு சிங்கவால் குரங்கு ஒரு ஆணும், 3 பெண்ணும், 1999-ம் ஆண்டு ஒரு பெண்ணும் கொண்டு வரப்பட்டது. இந்த குரங்குகளும் அதன் வழித்தோன்றல்களும் இனப்பெருக்கம் செய்தது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஏராளமான சிங்கவால் குரங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு காட்டுப்பன்றியின் காலில் சமீபத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பூங்கா டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் திடீரென காட்டுப்பன்றி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

அதேபோல பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த ஒரு சாம்பார் மான் மற்றும் ஒரு காட்டுமாடு போன்றவை உடல்நிலை சரியில்லாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தது. சாம்பார் மான் மற்றும் காட்டுமாடுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சாம்பார் மான், காட்டுமாடு இரண்டும் பரிதாபமாக உயிரிழந்தன.

பூங்காவில் உயிரிழந்த காட்டுப்பன்றி, சாம்பார் மான், காட்டுமாடு ஆகியவை பிரேத பரிசோதனைக்கு பிறகு பூங்கா வளாகத்தில் உள்ள எரியூட்டு மையத்தில் தகனம் செய்யப்பட்டது. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு ஏதாவது நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து டாக்டர்கள் தீவிரமாக பரிசோதித்து வருகின்றனர்.


Next Story