ஒற்றை தலைமை விவகாரம்: பொதுக்குழுவை கூட்ட 90 சதவீத ஆதரவு; புறக்கணிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முடிவு?


ஒற்றை தலைமை விவகாரம்: பொதுக்குழுவை கூட்ட 90 சதவீத ஆதரவு;  புறக்கணிக்க ஓ.பன்னீர் செல்வம் தரப்பு முடிவு?
x

திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக்குழுவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

ஒற்றை தலைமை விவகாரம்: பொதுக்குழுவை கூட்ட 90 சதவீத ஆதரவு; புறக்கணிக்க ஓபிஎஸ் தரப்பு முடிவு?சென்னை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி நிர்வாகிகள் நடையாய் நடந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்கள். ஒற்றை தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில் தனது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் நேராக ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எம்.பாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதனால் சமாதானம் செய்ய வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றனர். இதனால் வழக்கம்போல நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையை எழுப்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வியூகம் வகுத்து வருகிறார்கள். இதை முறியடிக்க ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறார்.

நேற்று 7வது நாளாக அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி எடப்பாடி தரப்பு காவல் நிலையத்தை நாடியுள்ளது.இதனால் அதிமுக பொதுக் குழு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கோகுல இந்திரா ஆதரவு தெரிவித்தார்.

இன்று 8 வது நாளாக எடப்பாடி பழனிசாமியும் ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

திட்டமிட்டபடி நாளை மறுநாள் பொதுக்குழுவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதற்கிடையில் பொதுக்குழுவில் நிறைவேற்ற பொதுவான 23 தீர்மானங்கள் இறுதி செய்யப்பட்டு உள்ளன. 12 பேர் கொண்ட தீர்மான குழுவினர் இதனை இறுதி செய்து இருவருக்கும் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. முடக்குவது கண்டித்தும், ஆளும் கட்சியினர் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் தீர்மானங்கள் கொண்டு வரப்படுகிறது.

இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சினை போன்ற பொதுவான பிரச்சினைக்குரிய தீர்மானங்களும் இடம்பெறுகின்றன.

இந்த தீர்மானங்களை யார்-யார் முன்மொழிவது, வழிமொழிவது என்பது போன்ற பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் அடங்கிய தீர்மான குழு கொண்டு வந்துள்ள இத்தீர்மானங்கள் பொதுக்குழுவில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.

ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் இதில் இடம்பெறவில்லை. ஒற்றை தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானமாக கொண்டு வர எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பொதுக்குழு நடைபெறும் வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 2750 பேர் அமரக்கூடிய வகையில் இருக்கைகள் போடப்படுகின்றன. சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாததால் சுமார் 1000 இருக்கைகள் குறைக்கப்பட்டு உள்ளது.

சைவ-அசைவ உணவு, தண்ணீர் பாட்டில், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஞமின் தலைமையில் நடந்து வருகிறது. போலீஸ் பாதுகாப்புடன் பொதுக்குழுவை சுமூகமாக நடத்தி முடிக்க எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சுமார் 2700 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2300 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை 23-ந் தேதி திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும் இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இதனால் 90 சதவீதம் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் கல்யாண மண்டபம் தயாராகி வருகிறது. கட் அவுட்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை கோரி சிலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இன்று 2வது நாளாக விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக ஏதாவது பதில் கிடைத்தால் மட்டுமே எடப்பாடியின் ஒற்றைத் தலைமை திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும் என்று ஓபிஎஸ் அணியினர் கருதுகிறார்கள். இந்த வழக்கு விசாரணை இன்று மாலை நடைபெற உள்ளது. அதுவரை பொறுமை காக்க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.

வழக்கின் முடிவு தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், நாளை மறுதினம் (23ம் தேதி) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளாதபட்சத்தில், ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளனர். மேலும் தனியாக பொதுக்குழுவை கூட்டி தான் நடத்துவதுதான் உண்மையான அ.தி.மு.க. என்று கூறுவதாகவும் கூறப்படுகிறது.


Next Story