#லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!


#லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!
x
தினத்தந்தி 19 Jun 2022 3:34 AM GMT (Updated: 19 Jun 2022 2:28 PM GMT)

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Live Updates

  • 19 Jun 2022 2:28 PM GMT

    அதிமுக பொதுக்குழு நிச்சயம் நடைபெறும், பொதுக்குழுவில் ஒற்றைத்தலைமையாக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

  • 19 Jun 2022 1:31 PM GMT

    அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி செயல்பட வேண்டும் - முன்னாள் எம்.பி குமார்

    அடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுக்கு நம்பிக்கையான தலைவர் இருந்தால் தான் முடியும். எடப்பாடி பழனிசாமி 4½ ஆண்டுகளாக முதல்-அமைச்சர் பதவியில் துணிவோடும், தனித்தன்மையோடும் சிறப்பாக ஆட்சியை நடத்தினார். ஆகவே அ.தி.மு.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியே தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். இதுவே எங்களின் விருப்பம் - முன்னாள் எம்.பி குமார்

  • ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு - முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன்
    19 Jun 2022 10:39 AM GMT

    ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு - முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன்

    எடப்பாடி பழனிசாமியை சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏ ஜக்கையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கட்சிக்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி எழுந்ததும், தலைமை கழகம், மாவட்ட செயலாளர்கள் தலைமை கழக நிர்வாகிகள் ஏற்கனவே இதுபற்றி ஆலோசனை நடத்தி உள்ளனர். 23ம் தேதி அதற்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் நடடக்கவிருக்கிறது.

    அந்த வகையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் கட்சியை தலைமைதாங்கி வழிநடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். ஒற்றை தலைமை வேண்டும் என்பதை சொல்லியிருக்கிறோம். ஓபிஎஸ் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள், எடப்பாடியாரை ஏன் ஆதரிக்கிறோம் என்று கேட்கிறீர்கள். உள்கட்சி பிரச்சனைக்குள் செல்ல விரும்பவில்லை.

    ஆனால் தற்போது தமிழ்நாடு முழுவதும் எடப்பாடியாருக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கிறது. மெஜாரிட்டி இருந்தால் அவருக்கு அந்த வாய்ப்பை வழங்குவது ஜனநாயக கடமை ஆகும். தலைமை பதவியை அவருக்கு கொடுத்தால் மிக நன்றாக இருக்கும். மூத்த தலைவர்கள் கூடி சமரச முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். ஒற்றை தலைமையாக எடப்பாடியாருக்கு வழங்குவதுடன், மற்றவர்களுக்கு உரிய வாய்ப்புகளை வழங்கும் முயற்சியும் நடக்கிறது. ஒற்றை தலைமை என்று வந்தால் எடப்பாடி பழனிசாமி தேர்வாக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இவ்வாறு முன்னாள் எம்.எல்.ஏ. ஜக்கையன் தெரிவித்தார்.

  • 19 Jun 2022 9:36 AM GMT

    எடப்பாடி பழனிசாமி பெரும் காழ்ப்புணர்வு கொண்டவர் என்று அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி குற்றம் சாட்டியுள்ளார். அதிமுகவில் ஒற்றத்தலைமை விவகாரம் கடந்த சில நாட்களாக பெரும் விவாதப்பொருளாகியுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த புகழேந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். மேலும், புகழேந்தி கூறும் போது, “ ஈபிஎஸ் தலைமையில் அதிமுக சின்னாபின்னமாகிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

  • 19 Jun 2022 8:06 AM GMT


    அதிமுகவில் ஒற்றை தலைமை அவசியம்: காலத்தின் கட்டாயம் - முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

    * ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்

    * அதிமுகவில் ஒற்றைத் தலைமையை பெரும்பான்மையானோர் விரும்புகின்றனர்; பெரும்பாலானோர் விரும்புவதால் ஒற்றைத் தலைமையை எல்லாருமே ஏற்றுக்கொள்வார்கள் - ஓ.எஸ்.மணியன்

  • 19 Jun 2022 7:41 AM GMT


    அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை மட்டுமே விரும்புகின்றனர் - அதிமுக முன்னாள் எம்.பி., நட்டர்ஜி

    * ஒற்றை தலைமை ஏற்க தகுதியானவர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே என்றும் தனக்கு பதவி இல்லை என்றால் கட்சியை அழிக்கும் நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்றுவிட்டார்: அது ஏற்புடையது அல்ல என்றும் அதிமுக முன்னாள் எம்.பி., நட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

  • 19 Jun 2022 7:38 AM GMT


    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் உடன் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி சந்திப்பு

  • 19 Jun 2022 7:14 AM GMT


    ஒற்றை தலைமை: பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது - அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை

    5 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை மாற்ற முடியாது என சட்ட விதியில் கூறப்படவில்லை என்று அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ இன்பதுரை தெரிவித்துள்ளார்.

    மேலும் சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கியதும், பதவியில் இருந்து நீக்கியதும் பொதுக்குழுதான். அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது; ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றும் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

  • 19 Jun 2022 6:44 AM GMT

    அதிமுகவில் இரு தரப்பினரும் ஒற்றுமை உணர்வோடு செயல்பட மூத்த நிர்வாகிகள் முயற்சி - அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன்

    ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் பழனிசாமி தரப்பினர் உறுதியாக உள்ளனர். இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்பதில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியுடன் உள்ளது. பேச்சுவார்த்தை தொடரும், சுமூக நிலை எட்டும் என எதிர்பார்க்கிறோம் என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.


Next Story