சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
21 ஆண்டுகளுக்கு பிறகு சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் தல வரலாறு படி வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், மேலும் விஷேச நாட்களிலும் கோவில் நடை திறப்பது வழக்கம். இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடைசியாக கடந்த 2002-ம் ஆண்டு மார்ச் மாதம் 17-ந்தேதி நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுமார் ரூ.3 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் முழுமையாக முடிவுற்றது. அதனை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 27-ந்தேதி கோவிலில் பூர்வாங்க பூஜைகளுடன் தொடங்கியது. மேலும் கும்பாபிஷேக விழா பூஜைகள் கோவில் வளாகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த 3 யாகசாலைகளில் உள்ள மொத்தம் 61 யாக குண்டங்களில் பூஜைகள் நடைபெற்றது.
புனிதநீர் ஊற்றி...
கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் சிவாச்சாரியார்கள் 6-ம் கால யாகசாலை பூஜையை தொடங்கினர். பின்னர் திருமேனி சுத்திகரித்து, திருக்காப்பு அணிவித்தனர். காலை 8 மணிக்கு மேல் யாகசாலைகளில் இருந்து இறை சக்திகளை மூலவருக்கு சேர்க்கும் நிகழ்வு நடைபெற்றது.
அதனை தொடர்ந்து 96 வகையான மூலிகை பொருட்கள், பழ வகைகள் வேள்வியில் இட்டு பூஜைகள் நிறைவுபெற்றன. காலை 9 மணிக்கு மேல் யாகசாலைகளில் இருந்து இசை வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க புனிதநீர் அடங்கிய குடங்களை தலையில் சுமந்து கொண்டு புறப்பட்ட சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி வலம் வந்து 5 நிலை ராஜகோபுரத்திற்கு வந்தடைந்தனர். பின்னர் கோவில் கருவறை கோபுர விமான கலசத்திற்கும், ராஜகோபுர விமான கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் பூசாரிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.
விண்ணை முட்டிய பக்தி கோஷம்
அப்போது கோவிலை சுற்றி கூடி நின்ற லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஓம்சக்தி, பராசக்தி... என விண்ணதிர கோஷங்கள் எழுப்பினர். பக்தர்கள் எழுப்பிய பக்தி கோஷம் விண்ணை முட்டியது. அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. மதியம் 3 மணிக்கு கருவறை மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்பாள் திருவீதி உலா வந்தார். இன்று (வியாழக்கிழமை) முதல் மண்டல பூஜை தொடங்குகிறது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார்
கும்பாபிஷேக விழாவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம், வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, பிரபாகரன் எம்.எல்.ஏ., கோவில் திருப்பணிக்குழு தலைவர் கங்காதரன், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் நா.சீனிவாசன், செல்லா சீனிவாசன், நீலகண்டன், பாரி, நாராயணன், ஜெயக்குமார், தினகரன், மஞ்சுளா மகாராஜன், மாவட்ட அறங்காவலர் நியமன குழுத்தலைவர் கலியபெருமாள் மற்றும் உறுப்பினர்கள், சென்னை கோட்டூர் ஸ்ரீ மகாமேருமண்டலி அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ மதுராம்பிகாநந்த பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள், ஜி.கே. கட்டுமான நிறுவன அதிபர் கண்ணன், அல்மைட்டி வித்யாலயா பள்ளி தாளாளர் ராம்குமார், சிறுவாச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், எக்ஸெல் குபேட்டா நிறுவன பங்குதாரர் சீத்தாபதி ரெட்டியார், தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில துணைத்தலைவர் கொளக்காநத்தம் ராமச்சந்திரன் அய்யர், மாநில செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி, ராம் ஏஜென்சி பெட்ரோல் பங்க் உரிமையாளரும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான சந்திரசேகர், பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயபால் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், பெரம்பலூர் உதவி ஆணையரும், கோவில் தக்காருமான லெட்சுமணன், கோவில் செயல் அலுவலர் வேல்முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், பூசாரிகள், உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கும்பாபிஷேக விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் உத்தரவின்பேரில், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் மேற்பார்வையில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், மாவட்ட போலீசாருடன், அருகே உள்ள மாவட்டங்களை சேர்ந்த போலீசார் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மதியம் 2 மணி வரை கனரக வாகனங்களுக்கு போலீசாரால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.