சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; இன்று நடக்கிறது


சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா; இன்று நடக்கிறது
x

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.

பெரம்பலூர்

யாக சாலை பூஜைகள்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கடைசியாக இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுமார் ரூ.4 கோடி செலவில் கோவில் திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 27-ந்தேதி பூஜையுடன் தொடங்கியது.

மேலும் கோவில் வளாகத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த 3 யாக சாலைகளில் உள்ள மொத்தம் 61 யாக குண்டங்களில் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 2-ந்தேதி முதல் கால யாக சாலை பூஜையும், நேற்று முன்தினம் 2, 3-ம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. நேற்று காலை 4-ம் கால யாக சாலை பூஜை தொடங்கி, மதியம் முடிவடைந்தது. இதற்கிடையே கோவிலில் அம்மனுக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சசி நடைபெற்றது. இந்த பூஜை திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகா சந்நிதானம் திருமுன்னர் முன்னிலையில் நடைபெற்றது. மாலையில் தொடங்கிய 5-ம் கால யாக சாலை பூஜை இரவில் முடிவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதியமும், இரவிலும் பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகம்

கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு மேல் சிறப்பு வழிபாட்டுடன் 6-ம் கால யாக சாலை பூஜை தொடங்குகிறது. பின்னர் திருமேனி சுத்திகரித்தல், திருக்காப்பு அணிவித்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு மேல் யாக சாலைகளில் இருந்து இறை சக்திகளை மூலவருக்கு சேர்க்கும் நிகழ்வு நடக்கிறது. 96 வகையான மூலிகை பொருட்கள், பழ வகைகள் வேள்வியில் இட்டு பூஜை நிறைவுபெறுகிறது.

காலை 9 மணிக்கு மேல் யாக சாலைகளில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோவிலின் 5 நிலை ராஜகோபுரத்திற்கு புறப்பட்டு செல்கின்றனர். பின்னர் கோவில் கருவறை கோபுர விமான கலசத்திற்கும், ராஜகோபுர விமான கலசங்களுக்கும் ஒரே நேரத்தில் பூசாரிகளால் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து மதுரகாளியம்மன், அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது.

அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்

கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், கோவில் ஊழியர்கள், பணியாளர்கள், பூசாரிகள், கிராம மக்கள் மற்றும் உபயதாரர்கள் சிறப்பாக செய்துள்ளனர். மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகமும், போலீசார் தரப்பிலும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


Next Story