சித்த மருத்துவப்பிரிவு கட்டிடம் கட்டுமானத்தில் குளறுபடி

மடத்துக்குளம் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிடம் கட்டுமானப்பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சித்த மருத்துவப்பிரிவு
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. கடந்த 1950-ம் ஆண்டு பஞ்சாயத்து யூனியன் மருந்தகமாக தொடங்கி, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரி என படிப்படியாக தரம் உயர்ந்துள்ளது.
இந்த ஆஸ்பத்திரிக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டு 2018 ம் ஆண்டு திறக்கப்பட்டது. ஆனால் அதில் சித்த மருத்துவத்துக்கு அறை ஒதுக்கப்படவில்லை. இதனால் 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு பழைய கட்டிடத்திலேயே செயல்பட்டு வந்தது.
தரமற்ற பணிகள்
இதனையடுத்து தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அதே வளாகத்தில் சித்த மருத்துவப்பிரிவுக்கு தனி கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் கொரோனா பரவலால் பணிகள் தடைபட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கட்டுமானப் பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சித்த மருத்துவப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் தரமற்றதாக உள்ளது. இந்த கட்டிடத்தின் தரைதளத்தை சுத்தம் செய்ய கூட முடியாத நிலை உள்ளது.
சீமாறால் கூட்டினால் கூட சிமெண்டு பெயர்ந்து புழுதி பறக்கிறது. மேலும் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான சாய்தளம் ஆகியவற்றில் பக்கவாட்டு கைப்பிடிகள் அமைக்கப்படவில்லை. இதனால் நோயாளிகள் தடுமாறி விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே இந்த கட்டிடத்தின் தரம் குறித்து முழுமையாக ஆய்வு செய்யவும், குறைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணிகளை விரைவாக நிறைவு செய்து கட்டிடத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.






