கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேர் கைது


கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேர் கைது
x

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா விற்ற சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் சட்ட விரோதமாக கஞ்சாவை சிலர் விற்பனை செய்வதாகவும், அதனை பயன்படுத்தி இளைஞர்களும், மாணவர்களும் தவறான வழிக்கு சென்று வாழ்வை சீரழித்து கொள்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

6 பேர் கைது

அதன்படி போலீசார் நடத்திய சோதனையில், பேரளம் பண்டாரவடை மேலமாங்குடியை சேர்ந்த அன்பழகன் மகன் அன்புமணி (வயது21), எரவாஞ்சேரி திருவீழிமிழலை மேலநத்தம் பகுதியை சேர்ந்த ஜோதி மகன் தென்னரசு (30), திருவீழிமிழலை மேலத்தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் காளி என்கிற காளீஸ்வரன், மணவாளநல்லூரை சேர்ந்த செல்லதுரை மகன் அபிஷேக், மன்னார்குடியை சேர்ந்த சாதிக்பாட்சா மகன் ஷேக் அபுகான் மற்றும் 18 வயது சிறுவன் ஆகிய 6 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து 6 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.43 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 350 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story