எலும்புக்கூடு கிடந்த விவகாரம்: "குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசினேன்"- 8 ஆண்டுக்கு பின் சிக்கிய பெண் வாக்குமூலம்


எலும்புக்கூடு கிடந்த விவகாரம்: குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொன்று கழிவுநீர் தொட்டிக்குள் வீசினேன்- 8 ஆண்டுக்கு பின் சிக்கிய பெண் வாக்குமூலம்
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டையில் கழிவுநீர் தொட்டியில் எலும்புக்கூடு கிடந்த விவகாரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. 8 ஆண்டுக்கு பின் கைதான பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

சிவகங்கை

தேவகோட்டை

தேவகோட்டையில் கழிவுநீர் தொட்டியில் எலும்புக்கூடு கிடந்த விவகாரத்தில் குடிபோதையில் தகராறு செய்ததால் கணவரை கொலை செய்தது அம்பலமாகி உள்ளது. 8 ஆண்டுக்கு பின் கைதான பெண் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.

எலும்புக்கூடு கிடந்ததால் பரபரப்பு

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பர் தெருவை சேர்ந்தவர் சீராளன். இவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 6 மாதங்களுக்கு ஒருமுறை தேவகோட்டை வந்து செல்வார். இவரது வீட்டின் காம்பவுண்டு பின் பக்கம் 2 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார்.

வாடகைக்கு உரிய வீடுகளுக்கு தனி கழிவறை தொட்டியும், வீட்டின் உரிமையாளருக்கு தனி கழிவறை தொட்டியும் உள்ளது. அவைகள் நிறைந்து வழிந்ததால் அதை வெளியேற்ற சுகாதார தொழிலாளர்களைக் கொண்டு நேற்று லாரி மூலம் கழிவுகளை அகற்ற சென்றனர்.

முதலில் வாடகைக்கு குடியிருப்போரின் கழிவறை தொட்டியில் உள்ள கழிவுகளை எடுத்துச் சென்றனர். பின்னர் உரிமையாளரின் கழிவறை ெதாட்டியில் இருந்து எடுத்துக் கொண்டிருந்தனர். திடீரென துணி தென்பட்டுள்ளது கோட்டைச்சாமி என்பவர் உள்ளே பார்க்கும் போது எலும்புகளும், மண்டை ஓடுகளும் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவரை கொன்றது அம்பலம்

அப்போது கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அதே முகவரியில் வசித்த பெண் தனது கணவரை காணவில்லை என நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது? என தெரியவில்லை.

இதையடுத்து தேவகோட்டை வீரபாண்டியபுரத்தில் வசித்த சுகந்தி(39) என்ற பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கூறியதாவது:-

எனது கணவர் பாண்டியன் (43). பாண்டியனை நான் காதலித்து திருமணம் செய்தேன். பாண்டியன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அடிக்கடி குடித்துவிட்டு என்னுடன் தகராறு செய்து வந்தார். சம்பவம் நடப்பதற்கு முன் 6 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். சம்பவத்தன்று என்னை தாக்கினார். நான் அவரை பிடித்து தள்ளியபோது வீட்டு உரிமையாளரின் இல்ல போர்டிகோ பில்லரில் அவர் தலை மோதியது. இதில் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். நான் அப்படியே விட்டுவிட்டு வீட்டிற்கு சென்று விட்டேன். அரை மணி நேரம் கழித்து அவரை வந்து பார்த்தபோது மயக்க நிலையில் இருந்தார். உடனே நான் அவரை இறந்துவிட்டதாக கருதி அருகில் இருந்த கழிவுத்தொட்டி மூடியை திறந்து உள்ளே தள்ளிவிட்டு மூடிவிட்டேன். இது 8 ஆண்டுக்கு முன்பு நடந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து இன்ஸ்பெக்டர் சரவணன் சுகந்தியை கைது செய்து தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மாரிமுத்து முன்னிலையில் ஆஜர்படுத்தினார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


Next Story