பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி


பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் பயிற்சி
x

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூகபாதுகாப்பு திட்டம்) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூகபாதுகாப்பு திட்டம்) முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திறன் பயிற்சி

தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத காலம் திறன் பயிற்சி மற்றும் ஒரு வார காலம் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது, கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது. பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வித்தகுதி 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40-ஆக இருத்தல் வேண்டும்.

வேலைவாய்ப்பு

பயிற்சியில் வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர் ஆகும். பயிற்சிக்கு கட்டணம் எதுவும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுவோருக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சி 7 நாட்கள் வழங்கப்படும். பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடக்கும். பயிற்சி பெறுபவர்களுக்கு தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து, 3 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சாரபயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பிவளைப்பவர் ஆகிய பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதை ஈடுசெய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும்.

இன்று தொடக்கம்

தமிழ்நாடு கட்டுமான கழகம், கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கப்படும். இதனை முதன்மைச்செயலாளர், தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story