டுவிட்டரில் அவதூறு கருத்து: காஞ்சீபுரம் பா.ஜ.க மாவட்ட செயலாளர் கைது
சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட காஞ்சீபுரம் பா.ஜ.க மாவட்ட செயலாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரிய காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவர் பா.ஜ.க.வில் காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளராக உள்ளார்.
இவர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்துக்களின் கோவில் உண்டியல் பணம் அரசுக்கு சொந்தம், இஸ்லாமிய மசூதிகளின் பணம் அவர்களுக்கு சொந்தமா? ஆண்டவா, தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என பதிவிட்டிருந்தார்.
மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்டதாக வாலாஜாபாத் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா என்பவர் காஞ்சீபுரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட செல்வத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பா.ஜ.க. மாவட்ட செயலாளர் கைதை கண்டித்து உத்திரமேரூர் மேற்கு மண்டல பா.ஜ.க தலைவர் குமார் தலைமையில் பா.ஜ.க.வினர் செங்கல்பட்டு சாலையில் மல்லியங்கரணை கூட்ரோட் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் உத்திரமேரூர்- செங்கல்பட்டு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.