தூங்கிக்கொண்டிருந்த பெயிண்டர் கழுத்தறுத்துக் கொலை - போலீஸ் விசாரணை
திண்டுக்கல்லில், கழுத்தை அறுத்து பெயிண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம்,முருகபவனம் வெக்காளியம்மன் கோவில் அருகில் வசிப்பவர் சிவக்குமார். இவருடைய மனைவி முனியம்மாள். இவர்களுக்கு பிரபாகரன் (வயது 20) என்ற மகன் உள்ளார். இவர் பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் முனியம்மாள் பக்கத்து தெருவில் வசிக்கும் உறவினரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
பிரபாகரன் மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து முனியம்மாள் வீட்டுக்கு திரும்பி வந்த போது, கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தனது மகன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியில் அலறி கூச்சல் போட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் ஓடி வந்து பார்த்தனர்.
தகராறு
பின்னர் அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது.
பின்னர் பிரபாகரனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதையடுத்து பிரபாகரனின் பெற்றோரிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நேற்று காலையில் நண்பர்கள், உறவினர்களுடன் விசேஷ நிகழ்ச்சிக்கு பிரபாகரன் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும் பின்னர் பிரபாகரன் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டார் எனவும் கூறினர்.
கழுத்தறுத்து கொலை
பிராபாகரனிடம், தகராறில் ஈடுபட்டவர்களில் சிலர் அவரை பின்தொடர்ந்து வீட்டுக்கு வந்ததாகவும் பின்னர் வீட்டில் பிரபாகரன் மட்டும் இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவர் தூங்கியதும் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து பிரபாகரனினிடம் தகராறில் ஈடுபட்ட உறவினர்கள், நண்பர்கள் யார்? அவர்களில் வீட்டுக்கு வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு தப்பிச்சென்றவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.