பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரம்பிக்குளம் அணையில் மதகு பொருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதகு பொருத்த ரூ.7 கோடி
பொள்ளாச்சி அருகே கேரள வனப்பகுதியில் பரம்பிக்குளம் அணை உள்ளது. 72 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் பாசனம் மற்றும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் அணை முழுகொள்ளளவை எட்டியது. இதை தொடர்ந்து அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் இரும்பு சங்கிலி அறுந்து பீம் (சுவர்) இடிந்து விழுந்ததில் மதகு சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. எனவே புதிதாக மதகு பொருத்துவதற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக திருச்சியில் உள்ள பணிமனையில் இருந்து உபகரணங் கள் வரவழைக்கப்பட்டது. தற்போது மதகு பொருத்தும் பணி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சோதனை முயற்சி
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், பரம்பிக்குளம் அணையில் சேதமடைந்த மதகிற்கு பதிலாக ரூ.7 கோடி செலவில் புதிதாக மதகு பொருத்தப்பட உள்ளது.
இதற்காக உபகரணங்களை வெல்டிங் வைத்து மதகை இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் ஒரு சில பணிகள் மட்டும் மீதமுள்ளது. விரைவில் பணிகள் முடிந்ததும் மதகை இயக்கி சோதனை முயற்சி மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.