சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் பாதிப்படைந்தது.
வேலை நிறுத்தம்
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தினர் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந் தேதி முதல் நடைமுறையில் உள்ள பல்வேறு மின் கட்டண உயர்வுகளை குறைத்து சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி புதுக்கோட்டையிலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. சிறு தொழில் அதிபர்கள் நல சங்கத்தினர் நேற்று ஒரு நாள் தங்களது நிறுவனங்களில் உற்பத்தி உள்பட வணிகத்தை நிறுத்தினர். இதில் இரும்பு பொருட்கள் தொடர்பான உற்பத்திகள், பாலித்தீன் சாக்குகள், கனரக வாகன பொருட்களுக்கான உற்பத்திகள் உள்பட சிறு தொழில் உற்பத்திகள் நடைபெறவில்லை. உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல் பாதிப்படைந்தது.
வணிகம் பாதிப்பு
மாவட்டத்தில் சிட்கோ, சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் உள்பட 3 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
இந்த வேலை நிறுத்தத்தால் உற்பத்தி பாதிப்படைந்ததோடு கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் பாதிப்படைந்தது. இதேபோல தொழிற்சாலை நிறுவனங்கள் இயங்காததால் மின்சார பயன்பாடும் இல்லாமல் போனது. இதனால் மின்சார வாரியத்திற்கு மின் கட்டணம் இழப்பு ஏற்படும் என்றனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வழக்கம் போல தொழில் நிறுவனங்கள் செயல்படும் என்றனர்.