சிறு, குறு தொழில்துறையினர் வேலை நிறுத்தம்
கோவை
மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழில்துறையினர் தொழிற்சாலைகளை மூடி வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் ரூ.5 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
சிறு, குறு தொழிற்சாலைகள்
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் ஆவாரம்பாளையம், இடையர்பாளையம், கணபதி, குறிச்சி, சிட்கோ, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட புறநகர் பகுதிகளிலும் உள்ள இந்த தொழிற்சாலைகளில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் மின் கட்டணம் உயர்வு, நிலை கட்டணம், பீக் ஹவர்ஸ் கட்டண உயர்வால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர். மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
தொழிற்சாலைகளை மூடி வேலைநிறுத்தம்
இதையடுத்து மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மின் கட்டண உயர்வை ரத்து செய்து, பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு சதவீத மின் கட்டணம் மட்டும் உயர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொழில் துறையினர் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேலான சிறு, குறு தொழில் நிறுவனங்களை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறு, குறு தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படும் குறிச்சி, சிட்கோ, கணபதி, இடையர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டு கிடந்தன. சில தொழிற்சாலைகள் முன்பு கருப்பு கொடியும் ஏற்றப்பட்டு இருந்தது.
தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு தொழில்துறையினர் திரண்டு வந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். மேலும் சிவானந்தா காலனியில் உள்ள மின் அலுவலகத்துக்கும் சென்று மின் கட்டணத்தை திரும்பப்பெற கோரி மனு கொடுத்தனர்.
பின்னர் அவர்கள் கூறியதாவது:-
கடும் பாதிப்பு
மின் கட்டண உயர்வால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தொழில்கள் நிரந்தரமாக முடங்கிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.
பீக் ஹவர்ஸ் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை திரும்பப் பெற வேண்டும். பழைய கட்டண முறையை அமல்படுத்த வேண்டும். சோலார் நெட்வொர்க்கிங் கட்டணத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
ரூ.5 ஆயிரம் கோடி உற்பத்தி பாதிப்பு
கோவை மாவட்டத்தில் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஒரு நாளுக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டதாக தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.