உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்


உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்
x

உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்

தஞ்சாவூர்

தஞ்சையில் ஒரு கிலோ சின்னவெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்னவெங்காயத்தின் விலையை கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வருவதாக இல்லத்தரசிகள் கூறினர்.

தஞ்சை தற்காலிக மார்க்கெட்

தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தஞ்சையில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அங்கு பெய்து வரும் மழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் விலை உயர்வு

தஞ்சைக்கு பெரம்பலூர், உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்தும், கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்தும் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். தினமும் 5 லாரிகளில் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த வெங்காயம் தான் தற்போது விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை உயரத்தொடங்கி விட்டது.

கடந்த 2 நாட்கள் வரை 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது 1 கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல்லாரியின் விலையும் உயர தொடங்கி இருக்கிறது. ரூ.15 முதல் 30 வரை விற்பனையான பல்லாரி நேற்று ரூ.40-க்கு விற்பனையானது.தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருவதால், வியாபாரிகள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு காய்கறிகளை ஏற்றி வரும் லாரிகள் கனமழையால் ஆங்காங்கே நிற்பதால் சந்தைக்கு காய்கறிகள் வருவது தாமதமாகிறது.

கண்ணீர் வருகிறது

கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சின்ன வெங்காயம் அழுகி போய் வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சின்ன வெங்காயம் வாங்க வந்தவர்கள் விலை உயர்ந்துள்ளதை கேட்டவுடன் 1 கிலோவிற்கு பதில் ¼ கிலோ, ½ கிலோ என குறைந்த அளவு வாங்கி சென்றனர். தீபாவளி முடியும் வரை விலை ஏற்றம் நீடிக்கும் என்று விவசாயிகளும் வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், சின்ன வெங்காயம் சேர்க்காமல் எந்த உணவும் தயாரிக்க முடியாது. உணவுகளுக்கு சுவை அளிப்பில் முக்கிய பங்கு சின்ன வெங்காயத்திற்கு உள்ளது. கடந்த திங்கட்கிழமை வெங்காயம் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை அதிகரித்து ரூ.100-க்கு விற்பனையாவது அதிர்ச்சி அளிக்கிறது. வெங்காயத்தை பொருத்தவரை உரித்தால் தான் கண்ணீர் வரும். ஆனால் விலையை கேட்டாலே தற்போது கண்ணீர் வருகிறது என்றனர்.


Next Story