மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு குறு வணிகர்கள் போராட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து சிறு குறு வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் முழுவதும் சிறுகுறு வியாபாரிகள் மின் கட்டண உயர்வை கண்டித்து ஒருநாள் மின் நுகர்வு அற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சிங்கம்புணரி பகுதியில் உள்ள கயிறு மற்றும் கயிறு சார்ந்த உற்பத்தி செய்யும் சிறுகுறு நிறுவனத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கூடுதலாக அறிவித்திருக்கும் மின் கட்டண உயர்வு, சோலார் பேனல் கட்டணம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தயார் செய்து தபால் நிலையம் மூலமாக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் கயிறு சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதன் நிறுவனர்கள் ஒன்றிணைந்து சிவகங்கை மாவட்ட கயர்ஸ் அசோசியேசன் சங்கத்தின் சார்பில் சிங்கம்புணரி தபால் நிலையத்திற்கு சென்று தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கம்புணரியில் கயிறு சார்ந்த கயிறு தயாரிக்கும் 30-க்கும் மேற்பட்ட சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் 30 நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.