ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

வேலூர் மாநகராட்சி பகுதியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு அளித்தனர்.
குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீடு, வீட்டுமனை பட்டா, கடனுதவி உள்ளிட்டவை தொடர்பாக 320 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உத்தரவிட்டார்.
வீட்டுமனை பட்டா
கூட்டத்தில் குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சிமன்ற தலைவர் ஜெய்சங்கர் தலைமையில் குடியாத்தம் நகர பா.ம.க. செயலாளர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில், உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பட்டி, ஆத்தோரம்பட்டி பகுதிகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் கடந்த 60 ஆண்டுகளாக 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றும்படி நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. எனவே உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலை பகுதி இல்லாத அரசு புறம்போக்கு இடத்தில் 200 குடும்பத்தினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜிநகரை சேர்ந்த கணேசன் அளித்த மனுவில், எனக்கு ஒரு கால் அறுவை சிகிச்சையினால் அகற்றப்பட்டு மாற்றுத்திறனாளியாக உள்ளேன். அதற்கான அடையாள அட்டை உள்ளது. வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி இருசக்கர வாகனம் பெறுவதற்கான நேர்முக தேர்வில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேர்முக தேர்வில் பரிசோதித்த டாக்டர் பயனாளிகள் பட்டியலில் இருந்து என்னை நிராகரித்து விட்டார். இதனை மீண்டும் பரிசீலனை செய்து, எனக்கு இருசக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
ஸ்மார்ட் சிட்டி பணிகள்
அணைக்கட்டை அடுத்த புத்தூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் அளித்த மனுவில், எனது மாமியார் சொந்த இடத்தில் தொகுப்பு வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த பகுதியை சேர்ந்த சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அந்த வீட்டிற்கு பத்திரப்பதிவு செய்து கொண்டனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தேன். இதையறிந்து சிலர் பேச்சுவார்த்தைக்கு என்னை அழைத்து அங்கு வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது என்னை தாக்கியவர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். எனவே பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், வேலூர் மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் உள்ள பல்வேறு தெருக்களின் பெயர்கள் ஜாதிகளின் பெயர்களில் உள்ளன. அவற்றை நீக்க வேண்டும். அரியூரில் 20 ஆண்டுகளாக மூடி கிடக்கும் நூற்பாலையை திறந்து வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வேலூர் மாநகராட்சி பகுதியில் தரமற்ற சாலைகள் போட்ட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்தும், தரமாகவும் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
வீட்டை விட்டு வெளியேற்றம்...
காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் கீழ்மோட்டூர் பகுதியை சேர்ந்த தனலட்சுமி அளித்த மனுவில், எனது கணவர் கண்ணன் ஓய்வுப்பெற்ற ரெயில்வே ஊழியர். எங்களுக்கு ஒரு மகன் மட்டுமே உள்ளான். நாங்கள் மகன் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தோம். இந்த நிலையில் வீட்டை விட்டு என்னையும், கணவரையும் மருமகள் வெளியேற்றி விட்டார். தற்போது நாங்கள் பாழடைந்த வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டை விட்டு வெளியேற்றிய மருமகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் பெரியகுனிச்சி, வெங்களபுரத்தை சேர்ந்த சம்பத், முரளி ஆகியோர் அளித்த மனுவில், நாங்கள் குற்றவழக்கில் வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை அனுபவித்து கடந்த ஜனவரி மாதம் விடுதலை ஆனோம். 6 மாதங்கள் ஆகியும் முன்னாள் சிறைவாசிகள் நிதி வழங்கப்படவில்லை. எங்களின் வாழ்வாதாரத்திற்காக உடனடியாக அதனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
காட்பாடியை அடுத்த கீழ்முட்டுக்கூரை சேர்ந்த ஜெகதா அளித்த மனுவில், எனது குடும்பத்தை கடந்த 5 ஆண்டுகளாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். திருமணம், திருவிழா போன்றவற்றில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. சிலர் கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே இதில் நடவடிக்கை எடுத்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.