உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்-மருத்துவர், பொதுமக்கள் கருத்து
உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம் குறித்து மருத்துவர், பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர் கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.
அதிகரிப்பு
தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலை பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவரும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-
அபாயகரமான பழக்கம்
சேலம் சுகாதார பிரிவு ஊழியர் தமிழரசி:-
தற்போது பரவி வரும் மிகப்பெரிய சமூக தீமைகளில் ஒன்று புகை பிடித்தல், மற்றும் போதைப்பொருள் பழக்கம் ஆகும். இந்த அபாயகரமான பழக்கம் நம் நாட்டில் மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறைகளை பெரிதும் பாதிக்கிறது. உலக சுகாதார அமைப்பு கூற்றுப்படி, புகைப்பழக்கத்தால் நுரையீரல் பாதிப்பு, புற்று நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்கள் ஏற்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், புகையிலை மற்றும் புகை பிடிப்பதால் 10 லட்சத்து 35 ஆயிரம் இறப்புகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் 87 சதவீதம், புகை பிடிப்பதால் தான் வருகிறது. இவ்வாறு பாதிக்கப்படுபவர்களில் 30 வயது முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் அதிகம். நுரையீரல் மட்டும் அல்லாமல் வாய், தொண்டை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை போன்றவைகளில் ஏற்படும் புற்று நோயும், புகைபிடிப்பதால் தான் அதிகம் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதை கட்டுப்படுத்த அரசு இதற்காக தனி அமைப்பை தொடங்கி போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இருந்த போதிலும் இந்த மாற்றம் புகை பிடிப்பவர்களிடம் இருந்து ஏற்பட வேண்டும். எந்த ஒரு போதை பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அவரவர்களிடம் இருந்து தான் தொடங்க வேண்டும்.
முதல் காரணம்
சேலத்தை சேர்ந்த தமிழழகன்:-
புகை பழக்கத்தால் வயிறு புண்ணாகிவிடும். புற்று நோய்க்கு முதல் காரணம் புகைப்பிடிப்பது தான். புகைப்பிடிப்பதால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். பலர் சாலைகளில் நடந்து செல்லும் போது புகைப்பிடித்து செல்வதை காணமுடிகிறது. இதனால் அவர்களுக்கு உடல் பாதிப்பு ஏற்படுவது மட்டும் இல்லாமல், அவரது பின்னால் சாலையில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே உடல் நலத்தை பாதிக்கும் இந்த பழக்கம் தேவையா? என்பதை உணர வேண்டும். பொது இடங்களில் புகை பிடிப்பதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைய வாய்ப்பு உள்ளது
சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் மணி:-
புகை பிடிப்பதால் சளி கடினமாகும். இதனால் நுரையீரலில் நீர் கோர்த்து புற்று நோய் ஏற்படும். மேலும் ரத்தக்குழாய் சுருங்கி ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு ஏற்படும். இதனால் இதயம் பாதிக்கும். மேலும் ரத்த குழாய் சுருங்கும் போது மூளைக்கு ரத்தம் செல்வது குறைந்து, பக்கவாத நோய் மற்றும் கிட்னி பாதிப்பு ஏற்படும். நிக்கோடின் என்ற வேதிப்பொருள் மூலம் ஏற்படும் ஒருவித போதைக்காகவே சிலர் புகைப்பிடிக்கின்றனர். புகைப்பழக்கத்தை கைவிட, முதலில் குறைந்த அளவு நிக்கோட்டின் உள்ள 'சுவிங்கம்' என்ற பொருளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது புகைப்பழக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. பின்னர் உடற்பயிற்சி, யோகா போன்றவைகளில் ஈடுபட்டால் புகைப்பழக்கத்தை முழுவதையும் கைவிட முடியும்.
அதிகரித்து வருகிறது
சேலத்தை சேர்ந்த செவிலியர் சித்ரா:-
சமீப காலமாக புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்பத்தில் உள்ள ஒருவர் புகை பிடிப்பதால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு 20 சிகரெட் புகைக்கிறார் என்றால், அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு சிகரெட் புகைத்ததற்கான பாதிப்பு ஏற்படும். இதனால் அவருக்கு மட்டும் இன்றி வீட்டில் உள்ளவர்களுக்கும் நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் உள்ளிட்ட பல வித நோய்கள் ஏற்பட்டு உயிர் இழப்பும் ஏற்படுகிறது. எனவே வளமான இந்தியாவை உருவாக்க புகைப்பழக்கத்திற்கு அடிமையாவதை கைவிட வேண்டும். அதே போன்று புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ளும் விதத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.