உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்


உயிருக்கு பகையாகும் புகைப்பழக்கம்
x

மனிதர்களை சீரழிக்கும் பழக்கங்களில் புகைப்பழக்கமும் ஒன்று. புகைபிடிப்பதால் உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்து உறுப்புகளுமே பாதிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால் ஆண், பெண் வேறுபாடின்றி சிறு வயதினர்கூட தற்போது புகைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருக்கிறார்கள்.

புதுக்கோட்டை

அதிகரிப்பு

தமிழகத்தில், பொது இடங்களில் புகையிலை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, பொது சுகாதாரத்துறை, போலீஸ் துறை, உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் உள்பட 21 பேருக்கு புகையிலை பொருட்கள் கட்டுப்பாடு சட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தை சரிவர யாரும் நடைமுறைப்படுத்தாததால் பஸ் நிலையங்கள், டீக்கடைகள் என்று பொது இடங்களில் சிகரெட், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் ஒருவருக்கு ஏற்படும் தீங்குகள், பொது இடங்களில் புகைபிடிப்பதால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாக்டர்களும், பொதுமக்களும் தெரிவித்து இருக்கும் கருத்துகள் வருமாறு:-

அபராதம்

அறந்தாங்கியை சேர்ந்த திவ்யா:- பொது இடங்களில் புகை பிடிக்க தடை இருந்தாலும் யாருமே அதை கடைபிடிப்பது கிடையாது. அறந்தாங்கி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் இருக்கும் நேரத்தில் கூட சிலர் புகை பிடிக்கிறார்கள். இதனை சுவாசிக்கும் எங்களுக்கும் நோய் வரும் அபாயம் உள்ளது. சில நேரத்தில் கர்ப்பிணிகள் இதனை சுவாசிப்பதால் அவர்கள் வாந்தி எடுக்கிறார்கள். எனவே பொது இடங்களில் புகை பிடிப்பவர்களிடம் கடும் அபராதம் வசூலிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை

அன்னவாசலை சேர்ந்த கல்லூரி மாணவர் சுபாஷ்:- போதை பழக்கத்துக்கு அடிமையான பள்ளி, கல்லூரி மாணவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. இவர்களை தண்டிக்க நினைத்தால் கல்வியை தொடராமல் சென்று விடுகிறார்கள். பெற்றோர் தங்களது மகன்களை கண்டித்தால் எங்கே விபரீத முடிவு எடுத்து விடுவார்களோ என்று அஞ்சி தயக்கம் காட்டுகின்றனர். எனவே இத்தகைய மாணவர்களை கண்டறிந்து தொண்டு நிறுவனங்கள், போலீசார் மூலமாக விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்க வேண்டும். பெற்றோர் தங்களது பிள்ளைகளை தினமும் கண்காணித்து செயல்பட்டால் தான் வருங்கால மாணவர் சமுதாயத்தை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க முடியும்.

மன அழுத்தம்

விராலிமலையை சேர்ந்த மேனகா:- மன அழுத்தத்தை குறைப்பதற்காக சிலர் புகைபிடிப்பதாக கூறுகின்றனர். தற்காலிகமாக மன அழுத்தத்தை குறைப்பதாக இருந்தாலும் அது உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம். இதனால் பெரும்பாலானோர் நுரையீரல் புற்றுநோய், மாரடைப்பு, இதயகுழாய்கள் அடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மற்றும் குழந்தைகள் என புகைப்பவர்களின் அருகில் நிற்பதால் இந்நோய்க்கு உள்ளாகின்றனர். என்னதான் அரசு சார்பில் பொது இடங்கள் மற்றும் திரையரங்குகளிலும் புகைப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு செய்தாலும் அதே இடங்களில் புகைப்பதற்கான காரணிகளும் கிடைப்பது என்பது வேதனைக்குரியது. இதனால் மத்திய, மாநில அரசுகள் விளம்பரம் செய்வதோடு மட்டுமில்லாமல் அதன் தயாரிப்பையே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடையை கடுமையாக்க வேண்டும்

ரெகுநாதபுரத்தை சேர்ந்த சுப்பையா:- புகைப்பழக்கம் தனிமனித பாதிப்பு என்பதை விட சமுதாய பாதிப்பாகவே வளர்ந்து விட்டது. புகைபிடிப்பது சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கிறது. பிறர் செய்யும் தவறால் மற்றவர் பாதிக்கப்படுவது தண்டனைக்குரிய குற்றம் என்பதை யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என்ற தடை இருந்தும் அதை யாரும் பின்பற்றுவதாக தெரியவில்லை. சட்டத்தால் மட்டுமே எதற்கும் தீர்வுகாண முடியாது. மனமாற்றம் மட்டுமே புகைப்பழக்கத்தை மறக்க செய்யும். அதேவேளையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிகரெட் மற்றும் புகையிலையை பயன்படுத்துவது அதிகரித்துவிட்டது. இது பெரிய சமூக சீரழிவாக அமையும். எனவே பள்ளி, கல்லூரி வளாகங்களில் புகையிலை பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை கடுமையாக்க வேண்டும்.

கேள்விக்குறியாகும் வாழ்க்கை

கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ராவுத்தர்:- புகைப்பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. குறிப்பாக இளைஞர் சமுதாயம் புகைப்பழக்கத்தினால் சீரழிந்து வருகிறது. தற்போது பள்ளி மாணவர்கள் கஞ்சா மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனை அளிக்கிறது. இதனால் இவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. தொடர்ந்து இவர்கள் கஞ்சா புகைப்பதின் மூலம் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு காலப்போக்கில் மனநலம் பாதிக்கப்படும். எனவே இளைய சமுதாய நலனை கருத்தில் கொண்டு புகையிலை பொருட்களை கடைகளில் விற்பனை செய்ய அரசு தடை விதிக்க வேண்டும். இதன் மூலம் இளைஞர்களையும், பள்ளி மாணவர்களையும் போதை பழக்கத்தில் இருந்து மீட்க முடியும்.

புற்றுநோயை உண்டாக்கும்

டாக்டர் சரவணன்:- சிகரெட்டில் புற்றுநோயை உருவாக்கக்கூடிய நிக்கோடின் உள்ளிட்டவை கலந்து உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களுக்கு வாயில், உணவு குழாய், கணையத்தில் புற்றுநோயை உண்டாக்கும். இதய நோயையும் உண்டாக்குகிறது. நுரையீரலை பாதிக்கிறது. வாயில் பற்களையும் பாதிக்கும். தூக்கமின்மையை உண்டு பண்ணும். மனநோய் பாதிப்பை கூட சில நேரங்களில் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. விந்தணுக்கள் உற்பத்தியை குறைக்கும். புகைபிடிக்கும் பழக்கம் உள்ள பல இளைஞர்களுக்கு தற்போது குழந்தை பாக்கியம் என்பது இல்லாமல் உள்ளது. குழந்தை பெறுவதற்கான சிகிச்சையை பெற வேண்டிய நிலை உள்ளது. புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாவதால் அடிக்கடி பிடிக்க தோன்றும். புகைபிடிப்பதால் தற்காலிகமாக மகிழ்ச்சி கிடைப்பது போல் தோன்றும். புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது நல்லது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

பொன்னமராவதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஆகாஷ்:- சிகரெட் பயன்படுத்துபவர்களைவிட அவர்களின் அருகே நின்று சுவாசிப்பவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. எனவே சிகரெட் பிடிப்பவர்கள் அருேக நாம் நிற்பதை தவிர்க்க வேண்டும். முதலில் புகையிலை பொருட்கள் உற்பத்தியை நிறுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிகரெட் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து சிகரெட் பெட்டியில் புகைப்படமாக அச்சிடப்பட்டு உள்ளது. இருப்பினும் அதில் விழிப்புணர்வு ஏற்படுவதாக தெரியவில்லை. மேலும், பள்ளி, கல்லூரிகளில் புகையிலை பொருட்கள் விற்பதற்கு தடை என்று அரசு பதாகையை வைத்துள்ளது. இருப்பினும் நம் மக்கள் பல கிலோமீட்டர் சென்றாவது அதனை வாங்கி பயன்படுத்துகிறார்கள். எனவே புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அடிக்கடி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

புதிய சட்டங்கள்

வக்கீல் திலீபன் ராஜா:- பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதால் பெண்கள் குறிப்பாக குழந்தைகள் மிகுந்த அளவில் பாதிப்படைகிறார்கள். சிகரெட் உள்ளிட்ட புகையிலையில் உள்ள நிக்கோடினால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகமாக வருகிறது. தானே விரும்பி சிகரெட்டையும், புகையிலையும் பயன்படுத்தும் நபர்களுக்கு இந்த நோய் தாக்குவது இயல்பானது. மாறாக பொது இடங்களில் நாகரிகமற்ற முறையில் சிகரெட் பிடிப்பவர்களால் அப்பாவி மக்கள் குறிப்பாக பெண்கள் பாதிப்படைவது கண்டிக்கத்தக்க செயலாகும். அதற்கு தற்போது இருக்கிற குறைந்தபட்ச சிறை தண்டனையை அல்லது அபராதத்தை அதிகப்படுத்துவது நடைமுறை பயன்பாட்டில் தேவையாக உள்ளது. வளர்ந்துவரும் நாகரிக உலகில் மனித சமூகம் அனைத்து தளங்களிலும் முன்னேற்றமும், வலிமையும் பெறுவதற்கு தனிமனித ஒழுக்கம் மிக முக்கிய பங்காற்றுகிறது என்பதை உணர வேண்டும். அதற்கு தகுந்தார்போல் தனிமனித ஒழுக்கத்தை வரைமுறைப்படுத்தும் விதமாக புதிய சட்டங்களும், விதிகளும் இயற்ற வேண்டிய தேவையை நாம் உணர வேண்டும்.

ஞாபகமறதி நோய் வரும்

அரசு மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம்:- 'இளைய சமுதாயத்தினர் இடையே புகைபிடிக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் இந்த பழக்கம் பரவுவது கவலை அளிக்கிறது. நரம்பியல் ரீதியாக பார்த்தால், புகைபிடிப்பதால் வாதநோய் வர 4 சதவீத வாய்ப்பு உள்ளது. அத்துடன் ஞாபகமறதி உள்ளிட்ட நரம்பியல் நோய்களுக்கும் புகைப்பழக்கம் வித்திடுகிறது. நம் நாட்டில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களில் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்கள் குறித்து பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்'.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புகைப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது, 'கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுவேன்' என்பதுதான். நெடுநாட்களாக பழகிப்போன புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட உறுதியான வைராக்கியம் தேவை. அந்த வைராக்கியம் இருந்தால் மட்டுமே, நம்மையும் மற்றவர்களையும் புகையிடம் இருந்து காப்பாற்ற முடியும்.


Next Story