ஒடிசாவில் இருந்துவிழுப்புரத்துக்கு 5 கிலோ கஞ்சா கடத்தல்4 பேர் கைது


ஒடிசாவில் இருந்துவிழுப்புரத்துக்கு 5 கிலோ கஞ்சா கடத்தல்4 பேர் கைது
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இருந்து விழுப்புரத்திற்கு கடத்தி வந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம்


விழுப்புரம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து அவர் வைத்திருந்த பண்டலை பிரித்து சோதனை செய்தனர். அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவர், ஒடிசா மாநிலம் சிங்கிப்பூர் கலுப்பட்ரோசாகி பகுதியை சேர்ந்த ஜோகந்திரா நாயக் மகன் பிந்துநாயக் (வயது 31) என்பதும், இவர் ஒடிசாவில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு கஞ்சாவை கடத்தி வந்து, பின்னர் அங்கிருந்து பஸ் மூலம் விழுப்புரத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.

4 பேர் கைது

இந்த கஞ்சாவை விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு காலனியை சேர்ந்த வீரப்பன் மகன் கவியரசன் (21), உதயகுமார் மகன் சஞ்சய் (21), மாம்பழப்பட்டு மெயின்ரோட்டை சேர்ந்த அபிப்ரகுமான் மகன் ரஜிபுதீன் (27) ஆகியோருக்கு வழங்குவதற்காக பிண்டுநாயக் கடத்தி வந்துள்ளார்.

அவர்கள் 3 பேரும் அந்த கஞ்சாவை சிறு, சிறு பொட்டலங்களாக போட்டு விழுப்புரம், மல்லிகைப்பட்டு, திருக்கோவிலூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மட்டுமின்றி இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

பிந்துநாயக், இதுபோன்று அடிக்கடி கஞ்சாவை கொண்டு வந்து கவியரசன் உள்ளிட்ட 3 பேரிடமும் விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து பிந்துநாயக், கவியரசன், சஞ்சய், ரஜிபுதீன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் போலீசார், விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story