ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தல்


ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்தல்
x

ரெயிலில் கடத்திய புகையிலை பொருட்களை, கொடைரோடு ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரெயில், கொடைரோடு ரெயில் நிலையத்தின் 1-வது நடைமேடைக்கு நேற்று காலை வந்தது. அதில் புகையிலை பொருட்கள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கொடைரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரெயிலில் ஏறி திடீரென சோதனை செய்தனர். பயணிகள் வைத்திருந்த பைகள், சூட்கேஸ் உள்ளிட்ட உடைமைகள் சோதனையிடப்பட்டன.

அப்போது முன்பதிவில்லாத பொதுப்பெட்டியில் கழிப்பறை அருகே ஒரு பை இருந்தது. கேட்பாரற்று கிடந்த அந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதற்குள், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 11 வகையான புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பையில் இருந்து 4 கிலோ 180 கிராம் எடை கொண்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயிலில் புகையிலை பொருட்கள் கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story