ஈரோடு மாநகர் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு- அச்சத்தில் பொதுமக்கள்; போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?


ஈரோடு மாநகர் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரிப்பு- அச்சத்தில் பொதுமக்கள்; போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
x

ஈரோடு மாநகர் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து திருட்டுகளை தடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் சங்கிலி பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடந்து வருவது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக போலீசார் நடவடிக்கை எடுத்து திருட்டுகளை தடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

அச்சம்

ஈரோடு மாவட்டம் என்றால் பொதுமக்கள் மிகுந்த அமைதியுடன் வாழும் மாவட்டமாக திகழ்கிறது. குற்ற சம்பவங்கள் என்பது எப்போதாவது நடைபெறுவதும், அப்படி நடைபெறும் குற்றங்களை போலீசார் விரைந்து கண்டு பிடிப்பதன் மூலம் பொதுமக்கள் பெரிய அச்சமின்றி வாழ்ந்து வரும் மாவட்டமாகும்.

ஆனால் சமீப காலமாக வழிப்பறி மற்றும் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ஈரோடு மாநகராட்சியில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறிகள், வீடு புகுந்து திருட்டு உள்ளிட்டவை தினசரி நடப்பது போன்று நடந்து வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால், போலீசாருக்கு சவால் விடும் வகையில் திருட்டு கும்பலை சேர்ந்தவர்கள் தொடர் குற்றநிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 26-ந் தேதி 2 வழிப்பறிகள் அடுத்தடுத்து நிகழ்ந்தது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு புகுந்து திருட்டு சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வேதனை

தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பெரும்பாலானவர்கள் வீடுகளை பூட்டி விட்டு சொந்த ஊர் செல்வது, சுற்றுலா தலங்களுக்கு செல்வது, கோவில்களுக்கு செல்வது என்று பல்வேறு நிகழ்வுகளை திட்டமிட்டு இருப்பார்கள். வீடுகளை பூட்டிவிட்டு நிம்மதியாக பொதுமக்கள் சென்று வந்தனர்.

இந்தநிலையில் பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் கும்பலால் பொதுமக்களின் நிம்மதி பறிபோய் உள்ளது. இதுபோல் காலை மற்றும் மாலையில் சாலைகளில் நடந்து செல்லும் மூதாட்டிகளை குறி வைத்து தங்கச்சங்கிலிகள் பறிப்பு சம்பவமும் வேதனை அளிப்பதாக உள்ளது.

குற்றப்பிரிவு போலீசார்

ஈரோடு போலீஸ் துறையை பொறுத்தவரை குற்றப்பிரிவு போலீசார் மிகுந்த திறமையுடன் குற்றவாளிகளை பிடித்து விடுவார்கள். ஈரோடு நகரில் உள்ள போலீஸ் நிலையங்களில் குற்றங்களை கண்டுபிடிக்கும் சிறப்பு பிரிவு போலீசார்கள் சுமார் 10 பேர் இருந்தனர். அவர்கள் எந்த போலீஸ் நிலைய எல்லைக்குள் குற்ற சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக ஒருங்கிணைந்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், தொடர்ந்து குற்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தடுப்பதிலும் தீவிர பணியாற்றுவார்கள்.

ஆனால் இவர்களில் பலரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதால், இவர்கள் குற்றப்பிரிவில் இருந்து பணி மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பயிற்சி

இதுகுறித்து குற்றப்பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிய போலீஸ் ஒருவர் கூறியதாவது:-

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக குற்ற நடவடிக்கைகள் தொடர்பாக புலன் விசாரணை செய்வது, குற்றவாளிகளை கண்டுபிடிப்பது என்று ஈரோட்டில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் பணி செய்து உள்ளனர். இவர்கள் திருடர்கள், கொள்ளையர்கள், வழிப்பறியில் ஈடுபடுபவர்களை அவர்களின் திருட்டு சம்பவங்களை வைத்தே கண்டு பிடிப்பதில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றாலும் குற்றப்பிரிவில் தொடர்ந்து பணியாற்றி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி வழிகாட்டுதலில் அவர்கள் பணி இருக்கும். இந்தநிலையில் வயது மூப்பு, உடல் நிலை காரணமாக சிலர் வேறு பணிக்கு மாறுதலாகி சென்று உள்ளனர். அதற்கு பதிலாக இளம் போலீசார் முழுமையாக குற்றப்பிரிவு தொடர்பான பயிற்சிகள் இல்லாமல் குற்றப்பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர். எனவே மூத்த குற்றப்பிரிவு போலீசாருடன், இளம் போலீசாரையும் இணைந்து பணியாற்ற வைத்தால் சில ஆண்டுகளிலேயே சிறந்த குற்றப்பிரிவு போலீசாரை ஈரோட்டில் உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் சமீபகாலமாக குற்றப்பிரிவில் சிறப்பாக பணியாற்றிய போலீசார் பலரும் 2 சக்கர வாகனங்களை மடக்கிப்பிடித்து அபராதம் விதிப்பது, குடித்து விட்டு செல்பவர்களை பிடித்து அபராதம் போடுவது என்று பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். குற்றவாளிகளுக்கு போலீசார் மீதான பயம் போய் விட்டது என்று சமீப காலமாக தமிழக போலீசாரை எதிர்க்கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில் ஈரோட்டில் தொடர்ந்து நடந்து வரும் குற்ற சம்பவங்கள் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் உண்மை. இந்த அச்சத்தை போக்க, ஈரோடு போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story