பவானிசாகர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
பவானிசாகர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
பவானிசாகர்
மதுரையை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 32). இவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். இவர் ஊர் ஊராக சென்று கடைகளுக்கு டீத்தூள் விற்பனை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் டீத்தூள் விற்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பவானிசாகரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள கிரசர் மேடு என்றஇடத்தில் 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தார்கள்.
திடீரென அவர்கள் மோட்டார்சைக்கிளை மறித்து, உன்னிடம் உள்ள பணத்தை கொடு இல்லை என்றால் குத்தி கொன்றுவிடுவோம் என்று கத்தியை காட்டி மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன அருண்குமார் தன்னிடம் இருந்த ரூ.3800-ஐ கொடுத்துவிட்டு அச்சத்துடன் சென்றுவிட்டார். அதன்பின்னர் இது குறித்து பவானிசாகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அருண்குமாரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள ஜே.ஜே. நகரில் வசிக்கும் சிவக்குமார் என்கிற முருகேசன் (32), புஞ்சை புளியம்பட்டி சந்தை அருகே வசித்து வரும் பண்ணாரி என்கிற சதீஷ் (22) இருவரையும் கைது செய்தார்கள்.