பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு
அரசு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. 14-ந்தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை. மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் 16-ந்தேதி (திங்கட்கிழமை) கரிநாள் மற்றும் உழவர் திருநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
தை பொங்கல் தினம் அரசு விடுமுறை நாளில் வந்ததால் தொடர் விடுமுறை குறைந்துள்ளது. ஆனாலும் 14-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும்.
அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது.