கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
சென்னை,
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 பெற்று பயன்பெறுவதற்காக 1 கோடியே 63 லட்சம் குடும்பத் தலைவிகள் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த திட்டத்தின் பயனாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தும் நிகழ்ச்சியை கடந்த 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில், 56.5 லட்சம் குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் நிராகரிக்கப்பட்டது. தாங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பது தெரியாமல் குழப்பத்தில் தவித்த குடும்பத் தலைவிகளுக்கு தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள https://kmut.tn.gov.in என்ற புதிய இணையதளத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது.
இந்த இணையதளத்தில், பொதுமக்கள் தங்கள் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து ஆதாரில் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.யை பதிவு செய்து, என்ன காரணத்திற்காக தங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்து இருந்தது. மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது
இதனை தொடர்ந்து, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள், ரூ.1,000 வங்கி கணக்கிற்கு வராத குடும்பத் தலைவிகள் இ-சேவை மையங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட உதவி மையங்களில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை 7 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்து உள்ளது.