எந்த ஒரு குளறுபடியும் ஏற்படாத வகையில் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - உதயநிதி ஸ்டாலின்
எந்த குளறுபடியும் ஏற்படாத வகையில் கலைஞர் உரிமைத்தொைக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.
எந்த குளறுபடியும் ஏற்படாத வகையில் கலைஞர் உரிமைத்தொைக திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.
ஆய்வு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட அரசு பல்துறை சார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, எம்.பி.கள் சி.என்.அண்ணாதுரை, விஷ்ணுபிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், நுண்ணீர் பாசன செயல்பாடுகள், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
குளறுபடி இல்லாமல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில திட்டங்களில் தொய்வு உள்ளது. அதனை சரி செய்து திறம்பட செயல்பட வேண்டும். மேலும் சில திட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளது. அதனை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கல்வியில் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கி உள்ளது. கல்வித்துறையை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விரைவில் கலைஞர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் எந்த ஒரு குளறுபடியும் ஏற்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதுபோன்று முதல்- அமைச்சரும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
உறுதுணையாக இருக்க வேண்டும்
தற்போது நடைபெற்ற ஆய்வு கூட்டத்தின் அறிக்கை இன்று (புதன்கிழமை) முதல்- அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது திராவிட மாடல் அரசு நடத்தி வரும் முதல்-அமைச்சரின் நோக்கமாகும். தமிழகத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் ஒருவருக்காவது அரசு திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது.
அரசு அலுவலர்கள் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சிறப்பு திட்டங்கள் அரசு செயலாளர் திராஸ்அகமது, எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, அம்பேத்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ரிஷப் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.