சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகம் இடமாற்றம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக நாகை கலெக்டர் அலுவலக தரை தளத்தில் செயல்பட்டு வந்த சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலக தரைதளத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்வார்கள்.பின்னர் முதல் தளத்தில் நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் அந்த மனுவை கொடுக்க வேண்டும். இதனால் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும்.
கூட்டநெரிசலால் மாற்றுத்திறனாளிகள் அவதி
இந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை கடந்து தான் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருந்தது.இந்த நிலையில் வாரந்தோறும் நடக்கும் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டது.
சில நேரங்களில் அங்கு கூட்ட நெரிசலும் ஏற்படும். இந்த அலுவலகத்தை கடந்து மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள், தங்களது துறை அலுவலகத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு கூட செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இடமாற்றம்
கூட்ட நெரிசலை தவிர்க்க இந்த அலுவலகத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி கடந்த மாதம் 26-ந்தேதி 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து சமூக பாதுகாப்பு திட்ட பிரிவு அலுவலகத்தை, தரைதளத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கு அதிகாரிகள் மாற்றம் செய்தனர்.
இதனால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகம், முன்னாள் படை வீரர்கள் அலுவலகம், தபால் அலுவலகம் ஆகியவற்றுக்கு மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் எளிதாக சென்று வர முடிகிறது. மேலும் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவித்தனர்.