யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி


யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்கரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி
x

பாலக்கோடு அருகே யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க ரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. அதன் இயக்கத்தை மாவட்ட கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

பாலக்கோடு

யானைகள் அட்டகாசம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி பகுதிகளில் காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. அவை விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வந்தன. மேலும் சிலர் யானைகள் தாக்கியதில் காயம் அடைந்தனர்.

இது ஒருபுறம் இருக்க கடந்த மார்ச் மாதம் 7-ந் தேதி உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள் ஈச்சம்பள்ளம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி பலியாகின. கடந்த மாதம் ஆண் யானை ஒன்று தாழ்வாக சென்ற மின்கம்பியில் உரசியதில் பரிதாபமாக செத்தது.

சோலார் மின்வேலி

இந்தநிலையில் யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க மாவட்டத்தில் முதல் முறையாக பாலக்கோடு அருகே உள்ள பேவுஅள்ளி ஊராட்சியில் ரூ.16 லட்சத்தில் சோலார் மின்வேலி அமைக்கப்பட்டது. ஈச்சம்பள்ளம் கிராமத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள கரடி குண்டு முதல் கருங்கல்பாறை வரை 2.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு, சோலார் மின்வேலி இயக்கத்தை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அவர், சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளதால், யானைகள் ஊருக்குள் நுழைவது தடுக்கப்படும் என்றார். மேலும் மின்வேலியின் பயன்பாடு குறித்து கிராம மக்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறையினர், வருவாய் துறையினர், ஊரக உள்ளாட்சி துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story