காய்கறிகளை பாதுகாக்க சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு


காய்கறிகளை பாதுகாக்க சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு
x

அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகளை பாதுகாக்க சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகளை பாதுகாக்க சூரிய ஒளியில் இயங்கும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.

உழவர்சந்தை

அருப்புக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் கடந்த 2000-ம் ஆண்டு 72 கடைகளுடன் உழவர் சந்தை தொடங்கப்பட்டது. அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் விளைவித்த காய்கறிகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கமாக உள்ளது.

விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகள் விற்பனை செய்தது போக மீதமுள்ள காய்கறிகள் கெட்டுப்போய் வீணாக கீழே போடும் நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.

குளிர் பதன கிடங்கு

இந்தநிலையில் இதனை தவிர்ப்பதற்காக அருப்புக்கோட்டை உழவர் சந்தையில் ரூ.10 லட்சம் மதிப்பில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 5 டன் காய்கறிகளை பாதுகாக்கலாம். இது 24 மணி நேரமும் சூரிய ஒளி சக்தியால் இயங்க கூடியது.

மழைக்காலங்களில் மட்டும் சூரிய ஒளி கிடைக்காது என்பதால் மின்சாரத்தால் இயங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தாங்கள் விற்பனை செய்தது போக மீதமுள்ள காய்கறிகளை இலவசமாக குளிர் பதன கிடங்கில் வைத்துக் கொள்ளலாம்.

விவசாயிகளிடம் வரவேற்பு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

முன்பு நாங்கள் கொண்டுவரும் காய்கறிகள் விற்பனை போக மீதம் இருந்தால் அவை பாதுகாக்க முடியாமல் அழுகி விடும்.

இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்தநிலையில் குளிர் பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளை சேமிக்க மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடியதாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story