மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரர் கைது
முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அருகே குடும்ப தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
ராணுவ வீரர்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த உப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் வீரமணி (வயது 35). இவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பகுதியில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் கிருபா (30) என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளன.
ராணுவ வீரரான வீரமணி விடுமுறைக்கு அடிக்கடி சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீரமணி சொந்த ஊரில் மனைவி குழந்தைகளுடன் இருந்துள்ளார்.
அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்று வீரமணிக்கும் அவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, அரிவாளால் மனைவி கிருபாவை சரமாரியாக வெட்டினார். இதில் கிருபாவிற்கு இரண்டு கைகள் மற்றும் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து உறவினர்கள் கிருபாவை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரான வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.