சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்


சோலூர் மட்டம்  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை நியமிக்க வேண்டும்
x
தினத்தந்தி 25 Oct 2023 12:45 AM IST (Updated: 25 Oct 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

சோலூர் மட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர டாக்டர் பணியமர்த்தப் படாததால் சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். அதனால் உடனடியாக டாக்டரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.

நீலகிரி

கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் சுற்று வட்டாரங்களை சேர்ந்த சுமார் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் சென்று சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். இவற்றில் பெரும்பாலான கிராமங்களில் பழங்குடியின மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தரமாக டாக்டர் பணியமர்த்தப்படவில்லை என தெரிகிறது. இதனால் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று புதுக்காலனியைச் சேர்ந்த வையாபுரி (வயது 70) என்பவர் தவறி விழுந்ததில் முகத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு டாக்டர்கள் இல்லாததால் அவருக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. அதனால் அவரை சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது. அந்தப் பணியிடம் நிரப்பப்பட்டால் இது போன்ற சிரமங்கள் இருக்காது என சமாதான தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். மேலும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், 50-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர டாக்டரை பணியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.


Next Story