மக்கள் நீதிமன்றத்தில் 1,797 வழக்குகளுக்கு தீர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 1,797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நேற்று தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைமை நீதிபதி குணசேகரன் தலைமை தாங்கினார். நீதிபதிகள் முனுசாமி, கிருஷ்ணன் மற்றும் வட்ட அளவிலான சட்ட பணிகள் குழுவில் உள்ள நீதிபதிகள், வக்கீல்கள் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. முதன்மை குற்றவியல் நீதிபதி சாந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் விஜய்கார்த்திக் ஆகியோர் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்டு ஆலோசனை வழங்கினர்.
இதில் விபத்துகள் தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், தொழிலாளர் நலன் தொடர்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொது பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தவிர, புதிதாக தாக்கல் செய்ய உள்ள தகுதியுடைய வழக்குகள் மற்றும் பிரச்சினைகளுக்கும் சமரச முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாண வழிவகை செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸில் வந்த முதியவர்
குறிப்பாக நாமக்கல் அருகே உள்ள செல்லியாயிபாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சரவணன் (வயது32). இவர் ஹைட்ராலிக் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி நாமக்கல் போஸ்டல் நகரில் பழுதாகி நின்றுகொண்டு இருந்த டிப்பர் லாரியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது லாரியின் பின்பகுதி திடீரென இறங்கியதால் சரவணன் உடல்நசுங்கி இறந்தார்.
இதேபோல் எருமப்பட்டி ஒன்றியம் போடிநாயக்கன்பட்டி அருகே உள்ள ராசாபுதூரை சேர்ந்தவர் கார்த்திக் (36), கார் டிரைவர். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 9-ந் தேதி அலங்காநத்தம் பிரிவு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இந்த இரு வழக்குகளிலும் வக்கீல் என்.கே.பி.வடிவேல் வாதாடி வந்தார். நேற்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் இறந்து போன சரவணன் குடும்பத்திற்கு ரூ.48 லட்சத்து 18 ஆயிரமும், படுகாயம் அடைந்த கார்த்திக் குடும்பத்திற்கு ரூ.23 லட்சத்து 80 ஆயிரமும் இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முன்வந்தன. இதையடுத்து இருவழக்குகளிலும் சமரசம் ஏற்பட்டு, இழப்பீடு பெறுவதற்கான ஆணையை மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் வழங்கினார்.
இதேபோல் நாமக்கல் இ.பி.காலனியை சேர்ந்தவர் தஸ்தகிரி (65). இவர் கடந்த ஆண்டு சாலையில் நடந்து சென்றபோது கார் மோதி படுகாயம் அடைந்தார். நடக்க முடியாத இவரை நேற்று ஆம்புலன்ஸில் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். நீதிபதிகள் நேரில் விசாரணை செய்து, ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் இழப்பீடு பெறுவதற்கான ஆணையை அவரது மனைவி கமலத்திடம் வழங்கினர்.
1,797 வழக்குகளுக்கு தீர்வு
இதேபோல் திருச்செங்கோடு, ராசிபுரம், பரமத்தி, சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் கோர்ட்டிலும் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் மொத்தமாக 2,399 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இவற்றில் 1,797 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.6 கோடியே 57 லட்சத்து 49 ஆயிரத்து 761 செலுத்தி பைசல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.