நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்


நீட் தேர்வை ரத்து செய்வதே தீர்வு: மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்
x

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வு தோல்வி பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. இனியும் இதுபோன்ற வேதனைகள் தொடராமல் இருக்க, அநீதியான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இளநிலை மருத்துவம் பயில்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 1.32 லட்சம் பேர் தேர்வெழுதியதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 2020-ல் 57.44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2021-ல் 54.40 சதவீதமாகவும், நடப்பாண்டு 51.30 சதவீதமாகவும் குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, நடப்பாண்டு தேசிய தர வரிசையில் முதல் 50 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கல்வியில் முன்னேறிய மாநிலம் என்று தமிழக அரசு மார்தட்டிக் கொள்கிறது. ஆனால், நீட் தேர்ச்சி விகிதத்தில் தேசிய சராசரியைக் காட்டிலும் தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைவாகும். இத்தேர்வில் தேசிய அளவில் 56.28 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 51.30 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் தேர்ச்சி விகிதத்தில் முன்னிலை வகிக்கின்றன. நீட் தோல்வி காரணமாக சென்னை திருமுல்லைவாயலைச் சேர்ந்த மாணவி லக்ஷனா ஸ்வேதா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் குடும்பத்துக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் வேலஞ்சேரியைச் சேர்ந்த மாணவி ஜெயசுதா ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அரியலூர் அனிதாவில் தொடங்கிய நீட் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காதது வேதனையளிக்கிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. மத்திய அரசும் இதைக் கண்டுகொள்ளவில்லை.


நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற்றுத் தருவோம் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சியைப் பிடித்த திமுக அரசு, தற்கொலைகள் தொடர்வதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தனியார் மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து பயிற்சி பெறும் மாணவ, மாணவிகள் மட்டுமே நீட் தேர்வில் வெற்றி பெறுகின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிட்டது. நீட் என்கிற அநீதியான தேர்வு தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என்பது மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை மட்டுமல்ல, மக்களின் அனைவரின் விருப்பமுமாகும். எனவே, நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரலை தமிழக அரசு இன்னும் வலுவாக்க வேண்டும். மத்திய அரசும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, நாடு முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய முன்வர வேண்டும். அதேசமயம், இடைக்காலத் தீர்வாக, தகுதியான ஆசிரியர்களைக் கொண்டு, தரமான பயிற்சி மையங்களை தமிழக அரசே நடத்த வேண்டும். அல்லது, தனியார் பயிற்சி மையங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில நிதியுதவி வழங்க வேண்டும்.

காரைக்காலில் தனது மகளுக்குப் போட்டியாக இருந்த 8-ம் வகுப்பு மாணவருக்கு விஷம் கொடுத்துக் கொன்றுள்ளார் ஒரு தாய். மதிப்பெண்ணை மட்டுமே முன்னிறுத்தும் நமது கல்வி முறையின் தோல்வியே இதுபோன்ற செயல்களுக்குக் காரணம். எனவேதான், பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், தற்போதைய சூழலுக்கேற்ற மாற்றங்களைக் கொண்டுவர வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாகும். நடப்பாண்டு 17 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய நிலையில், 80 சதவீதம் பேர் தோல்வியைத் தழுவியுள்ளனர். தமிழக மாணவர்கள் முன்கூட்டியே பயிற்சியைத் தொடங்க வேண்டியதும், தரமான பயிற்சி பெறுவதும் அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசும், பிற அரசியல் கட்சிகளும் கடுமையாகப் போராட வேண்டும். அதேசமயம், நீட் தேர்வு நடைபெறும்வரை, அதில் தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற்று, மருத்துவராகும் வாய்ப்பைப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story