கரூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகன்
கரூர் அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தரகம்பட்டி,
லாரி டிரைவர்
கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பகுதி கிராமம் சி.புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). லாரி டிரைவர். இவரது மனைவி பாக்கியம் (50).இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் பழனிச்சாமி தினமும் குடித்துவிட்டு வந்து பாக்கியத்திடம் தகராறு செய்து வந்துள்ளார்.
கத்திக்குத்து
அதேபோல் பழனிச்சாமி குடித்துவிட்டு பாக்கியத்திடம் தகராறு செய்துள்ளார். இதனால் பழனிச்சாமியை மூத்த மகன் அழகர் (30) கண்டித்துள்ளார். இதில் கோபம் அடைந்த பழனிச்சாமி தனது மகன் அழகரை வீட்டை விட்டு வெளியே போ என்று திட்டியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அழகர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பழனிச்சாமியின் தலை மற்றும் மார்பு பகுதியில் குத்தினார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
பலி
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பழனிச்சாமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த கொலை சம்பவம் குறித்து பாக்கியம் கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, அழகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையை மகனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.