கள்ளக்குறிச்சி அருகே தாயை அடித்து கொலை செய்த மகன் - போலீசார் விசாரணை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாயை, மகன் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி தெற்கு காட்டுகொட்டாயை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வேலம்மாள் (வயது60). இவர்களுக்கு சுரேஷ்(31), வேல்முருகன்(29) ஆகிய இரு மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 20 வருடங்களுக்கு முன் முருகேசன் இறந்துவிட்டார். தாய் வேலம்மாள் மகன்களை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வேலம்மாள் குடும்ப கடன் தொகை ரூ.17 லட்சத்தை திருப்பி அடைக்குமாறு தனது மகன்களிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன் அண்ணன் சுரேஷ், தம்பி வேல்முருகனிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை மீண்டும் அண்ணன், தம்பிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, மூத்தமகன் சுரேஷ் மற்றும் உறவினர் முனீஸ்வரன் மகன் கவுதம் (29) ஆகியோர் கட்டையாலும், இரும்பு பைப்பாலும் வேலம்மாளை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வேலம்மாளை உறவினர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் வேலம்மாள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.