சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா


சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா
x

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமாிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமாிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சொரிமுத்து அய்யனார் கோவில்

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா கடந்த 6-ந் தேதி கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

நேற்று முன்தினம் இரவு சுவாமி குடியழைப்பு மற்றும் மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 14-ந் தேதி முதல் மாவட்டத்தின் சில பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவில் வளாகத்தில் வந்து தங்கினர்.

பக்தர்கள் குவிந்தனர்

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி அமாவாசை திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.

அதிகாலை முதல் பக்தர்கள் அகஸ்தியர்பட்டியில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் கோவிலுக்கு வந்து குவிந்தனர். அதிகாலை 4.30 மணிக்கு தளவாய் மாடசாமி சன்னதியில் பூதத்தார் மற்றும் தளவாய் சாமி கோமரத்தார்கள் பூஜையும், நேர்த்திக்கடனாக பக்தர்கள் சங்கிலி அடித்தல் நிகழ்ச்சியும் நடந்தது.

தொடர்ந்து கோவிலில் மகாலிங்க சுவாமி, சொரிமுத்து அய்யனார், சங்கிலி பூதத்தார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு பூஜையும் நடந்தது. முன்னதாக கோவில் முன்பு ஓடும் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

மதியம் 1 மணிக்கு மதிய கொடையும், மாலை 4.30 மணிக்கு கோமரத்தார்கள் பூக்குழி இறங்குதலும் நடைபெற்றது. இரவு 2 மணிக்கு சாமக்கொடை நடந்தது.

நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

இவர்கள் கோவிலில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு பொங்கலிட்டும், நேர்த்திக்கடன்களை செலுத்தியும் சுவாமியை வழிபட்டனர்.

வனப்பகுதிகளில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். சொரிமுத்து அய்யனார் கோவில் விலக்கு முதல் கோவில் வளாகங்கள், பக்தர்கள் தங்குமிடம் போன்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பாபநாசம் வனத்துறை சோதனை சாவடி முதல் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படாதவாறு வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சீராக பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.


Next Story