தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி: ஜமால்முகமது கல்லூரி அரையிறுதிக்கு தகுதி
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டியில் ஜமால்முகமது கல்லூரி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
21-வது தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான காஜாமியான் கோப்பை ஆக்கி போட்டி திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த போட்டியில் 18 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடக்கின்றன. ஜமால் முகமது கல்லூரி உடற்கல்வித்துறை சார்பில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் ஜமால்முகமது கல்லூரி அணி, ராமநாதபுரம் சையது அம்மாள் கல்லூரி அணியை எதிர்கொண்டு விளையாடியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக செயல்பட்ட ஜமால்முகமது கல்லூரி அணி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.
மற்றொரு கால் இறுதியில் கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி அணி 2-1 என்ற கோல் கணக்கில், மதுரை அருளானந்தர் கல்லூரி அணியை வென்றது. மற்ற கால் இறுதி போட்டிகளில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி அணி, கேரளா யூனியன் கிறிஸ்டியன் கல்லூரி அணியை 1-0 என்ற கோல் கணக்கிலும், கேரளா கிறிஸ்ட் கல்லூரி அணி, ஓசூர் அதியமான் கல்லூரி அணியை 3-2 என்ற கோல் கணக்கிலும் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இன்று (திங்கட்கிழமை) அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடக்கின்றன. தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது. இதில் ஒலிம்பியன் பாஸ்கரன் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.