கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது ரெயில் பாதை திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு


கடற்கரை-எழும்பூர் இடையிலான 4-வது ரெயில் பாதை திட்டத்தை மாற்றி அமைக்க தெற்கு ரெயில்வே முடிவு
x

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு அடுத்த முக்கிய ரெயில் நிலையமாக எழும்பூர் இருந்து வருகிறது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பின் காரணமாக சென்னை சென்டிரலில் இடநெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், எழும்பூரில் இருந்து கடற்கரை ரெயில் நிலையம் வரையில் 4-வது ரெயில் பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது.

அதன்படி, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96 கோடியே 70 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 4-வது வழித்தட பணிகளுக்காக கடற்கரை ரெயில் நிலையம் முதல் சேப்பாக்கம் வரையிலான புறநகர் ரெயில் சேவையை வரும் ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் 2024 ஜனவரி 31-ந்தேதி வரை 7 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. இதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சென்னை எழும்பூர் முதல் கடற்கரை ரெயில் நிலையம் வரையிலான 4-வது ரெயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், இந்த 4-வது வழித்தட பணிகளை பயணிகளுக்கு பாதிப்பின்றி எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று புதிய திட்டம் வகுத்து அதை சமர்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.


Next Story