தென்மேற்கு பருவமழை 50 சதவீதம் குறைவு
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 50 சத வீதம் அளவிற்கு குறைந்து உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழை 50 சத வீதம் அளவிற்கு குறைந்து உள்ளதாக காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் கூறினார்.
பருவமழை
கோவை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த ஆண்டு கோவையில் சராசரியை காட்டிலும் தென்மேற்கு பருவமழை குறைவாக பெய்யும் என்று கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் கோவையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கோடை மாதமான மே மாதத்திற்கு இணையாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொது மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பருவமழை ஏமாற்றியதால் கோவை வெயிலால் தவிக்கிறது.
இதுகுறித்து கோவை வேளாண் பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி மைய பேராசிரியர் சத்திய மூர்த்தி கூறியதாவது:-
50 சதவீதம் குறைவு
ஒவ்வொரு ஆண்டும் கோவையில் சராசரியாக 190 மி.மீ. அளவிற்கு மழை பெய்யும். ஆனால் நடப்பாண்டில் கோவையில் தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
ஜூன் மாதத்தில் கோவையில் 42.8 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 14.6 மி.மீ. அளவிற்கு மட்டுமே மழை கிடைத்து உள்ளது.
அதேபோல கடந்த ஜூலை மாதத்தில் 68.5 மி.மீ. அளவிற்கு மழை பெய்ய வேண்டிய நிலையில் 47.5 மி.மீ. பெய்து உள்ளது.
மழை பெய்ய வாய்ப்பு
எனவே ஜூன், ஜூலை ஆகிய 2 மாதங்களில் கோவையில் தென் மேற்கு பருவமழை 50 சதவீதம் அளவிற்கு குறைவாக பெய்து உள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30 மி.மீ. அளவிற்கு மழை பெய்ய வேண்டும்.
ஆனால் இதுவரை 1.3 மி.மீ. அளவிற்கு மட்டுமே மழை பெய்து உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 131 மி.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாதம் முடிய இன்னும் 2 வாரங்களே உள்ளன. எனவே பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.