சிறுமலையில் நோய் தாக்குதலால் நிறம் மாறும் சவ்சவ் காய்கள்; விவசாயிகள் கவலை


சிறுமலையில் நோய் தாக்குதலால் நிறம் மாறும் சவ்சவ் காய்கள்; விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 10 April 2023 2:00 AM IST (Updated: 10 April 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

சிறுமலையில் நோய் தாக்குதலால் நிறம் மாறும் சவ்சவ் காய்களால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் மா, பலா, வாழை, மிளகு, காப்பி, எலுமிச்சை, சவ்சவ், அவரை ஆகியவை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சிறுமலையில் விளையும் சவ்சவ் மினுமினுப்புடன் இருக்கும். அதேபோல் இதர பகுதிகளில் விளையும் சவ்சவ்வை விட, சிறுமலை சவ்சவ் சுவை மிகுந்தது.

எனவே சிறுமலை சவ்சவ் காய்களை பொதுமக்கள், வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்குகின்றனர். இதனால் சிறுமலையில் சவ்சவ் பயிரிடப்படும் பரப்பளவு ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு சிறுமலையில் வேளாண் பண்ணைப்புதூர், பழையூர், தாளக்கடை, தென்மலை, பொன்னுருக்கி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் சவ்சவ் பயிரிடப்பட்டு இருக்கிறது.

விவசாயிகள் அறுவடைக்கு தயாரான நிலையில், சவ்சவ் கொடிகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் தாக்குதலால் பச்சை நிறத்தில் இருந்த சவ்சவ் காய்கள் பழுப்பு நிறத்துக்கு மாறி வருகின்றன. இது விவசாயிகளை பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பழுப்பு நிறத்தில் மாறியதால் சவ்சவ் காய்களை வியாபாரிகள் வாங்காமல் தவிர்த்து செல்கின்றனர். இதனால் விளைந்த சவ்சவ் காய்கள் அறுவடை செய்யாமல் கொடிகளிலேயே விடப்பட்டுள்ளன. மேலும் அந்த நோய் அடுத்தடுத்த கொடிகளுக்கு பரவி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே சவ்சவ் கொடிகளில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story