ஸ்டாலின் ஆலோசனைப்படி செயல்படும் சபாநாயகர்; தி.மு.க.'பி' டீமாக செயல்படும் ஓபிஎஸ்' - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனைப்படி ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார் என எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்
சென்னை
சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளைக் கண்டித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே அ.தி.மு.க. எம்எல்ஏக்களுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கைக்கு அனுமதி கோரினோம். அது தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு ஆதாரங்களை சபாநாயகருக்கு நாங்கள் முறைப்படி அனுப்பிவைத்தோம்.
அந்த கோரிக்கை மீதான முடிவை சபாநாயகர் இரண்டு மாதங்கள் கிடப்பில் போட்டார். இது ஜனநாயகப் படுகொலை. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை நீக்கியது செல்லும் என்பதற்கு ஆதாரமாக சுப்ரீம் கோர்ட்டின் அந்த தீர்ப்பு இருக்கிறது.
அப்படியிருக்க, தமிழக முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்சை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார்.
சட்டப்பேரவையில் சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்-அமைச்சர் ஆலோசனைப்படி சபாநாயகர் செயல்படுகிறார். சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் நடுநிலை தவறிவிட்டார்.
நேற்று சட்டப்பேரவை முடிந்த பின்னர் ஸ்டாலினும், ஓபிஎஸ்சும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர். இந்த முயற்சிகள் எல்லாம் பச்சையாக தெரிகிறது.
அரசியல் ரீதியாக ஒரு சபாநாயகர் செயல்படுவது இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. எதிர்க்கட்சிகளை ஒடுக்கி ஆட்சி செய்கிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை போராடுவோம்" என்றார்.