இலவச வீடு கட்டுமான பணி குறித்து பயனாளிகளுடன் சபாநாயகர் கலந்தாய்வு


இலவச வீடு கட்டுமான பணி குறித்து பயனாளிகளுடன் சபாநாயகர் கலந்தாய்வு
x

அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணி குறித்து பயனாளிகளுடன் சபாநாயகர் அப்பாவு கலந்தாய்வு கூட்டம் நடத்தினார்.

திருநெல்வேலி

பணகுடி:

ராதாபுரம் தொகுதியில் உள்ள பணகுடி பேரூராட்சியில் அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து பயனாளிகளுடன் கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் கொடுக்கும் நிதி மக்களுக்கு சென்று சேர்வதில் உள்ள சிக்கல்களை கேட்டு தெரிந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பணி புரிய வேண்டும். அரசு நிதி தரவில்லை என தவறான தகவல் பரப்புவது தவறு, நிதி வரவில்லை என்றால் என்னிடம் தொடர்பு கொண்டு பேசுங்கள். நான் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல தயாராக உள்ளேன். மேலும் இடமும், வீடும் இல்லாதவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணகுடியில் 569 வீடுகள் தந்து உள்ளார். அதற்கான பணிகள் குத்திரபாஞ்சான் பகுதியில் விரைவில் தொடங்கும். அங்கு 50 ஏக்கரில் மத்திய அரசின் நெல் ஆராய்ச்சி மையம் வர உள்ளது. குடிநீர் திட்டத்திற்கு மீண்டும் நிதி கேட்டுள்ளோம். 7 பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி இதில் அடங்கும். அனைவருக்கும் தாமிரபரணி தண்ணீர் தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், பணகுடி பேரூராட்சி தலைவர் தனலட்சுமி, செயல் அலுவலர் சுஷ்மா, துணை தலைவர் சகாய புஷ்பராஜ், பணகுடி நகர தி.மு.க. செயலாளர் தமிழ்வாணன், இளநிலை பொறியாளர் சேதுராமலிங்கம், களக்காடு நகராட்சி துணை தலைவர் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல் வள்ளியூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர பஞ்சாயத்துக்களின் உதவி இயக்குனர் கண்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு பேசுகையில், வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 284 பயனாளிகள் அனைவருக்கும் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட பணி ஆணை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதில் 58 பேர் இன்னும் வீடு கட்டும் வேலையை தொடங்காமல் உள்ளனர். பலர் முதல் கட்ட, 2, 3-வது கட்ட வேலைகளை செய்து வருகின்றனர். இவர்களுக்கு செய்யப்பட்ட வேலைகளுக்கு உரிய பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். இதற்கு விரைவில் தீர்வு கண்டு பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடு கட்டுவதில் உள்ள இடர்பாடுகளை உரிய அதிகாரிகள் கொண்டு தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் நம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story